Enter your Email Address to subscribe to our newsletters

கொழும்பு, 26 பிப்ரவரி (ஹி.ச.)
டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனகா பந்து வீச தீர்மானித்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், கேப்டன் சான்ட்னர் அபாரமாக விளையாடி 47 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 32 ரன்களும், ஆலன் 23 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி 168 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் அதிகபட்சமாக தீக்சனா, சமீரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனை அடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் சார்பில் நிசாங்கா மற்றும் குசால் மெண்டீஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இந்த ஜோடியில் நிசாங்கா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த அசலங்கா 5 ரன்னும், மெண்டீஸ் 11 ரன்னும், ரத்னாயகா 10 ரன்னும், கேப்டன் தசுன் ஷனகா 3 ரன்னும், ஹெமந்தா 3 ரன்னும், ஓரளவுக்கு தாக்குப் பிடித்து ஆடிய கமிந்து மெண்டீஸ் 31 ரன்களும், வெல்லாலகே 29 ரன்களும் எடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியாக இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் விளைவாக, டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் இலங்கை அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் காரணமாக அரையிறுதிக்கான வாய்ப்பை இலங்கை அணி இழந்தது.
Hindusthan Samachar / JANAKI RAM