Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 27 பிப்ரவரி (ஹி.ச)
ஹைதராபாதை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சூரிய நாராயணன் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே சொந்தமாக தங்கும் விடுதி வைத்துள்ளார்.
இவர் நடிகர் சூர்யா நடித்த மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்த துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை ஆவார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி ஐந்து இளைஞர்கள் சூரிய நாராயணனுக்கு சொந்தமான விடுதியில் தங்கியுள்ளனர்.
இவரது பங்காளவில் இரண்டு தினங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் என்ற பேரில் 5 இளைஞர்கள் வந்து தங்கியுள்ளனர். அந்த கும்பல் சூரிய நாராயணனை கொலை செய்து விட்டு அங்கிருந்த சிசிடிவி, தங்க நகை மற்றும் முக்கிய ஆவணங்களை திருடி சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து, தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் தனியார் விடுதியை ஆய்வு செய்தனர்.
மேலும் கொலையாளிகள் யார் என தெரியாமல் இருந்த நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா மற்றும் 50 மேற்பட்ட சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து பல்வேறு பகுதிகளில் தேடுப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் சூரிய நாராயணன் கொலை வழக்கு சம்பந்தமாக 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் பகுதியை சேர்ந்த கிரிஜா மற்றும் அவருடைய மகன் கிரண் உள்ளிட்டோர் ஹவாலா பணத்தை மாற்றி கொடுத்து வரும் வேலையை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக கிரணின் நண்பர் சாம் என்பவர் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சாம் கிரிஜாவிடம் சில லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில் அதற்கான கமிஷனுடன் கூடிய கூடுதல் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை தர சிறிது கால அவகாசம் கேட்ட கிரிஜா நீண்ட நாளாக பணத்தை தராமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள கிரிஜாவின் கணவரின் நண்பரான சூரிய நாராயணன் உடல் நிலை சரியில்லாத நிலையில் கிரிஜா வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சூரிய நாராயணனுக்கு சொந்தமான பில்டிங் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அதன் தீர்ப்பு சூரிய நாராயணனுக்கு சாதகமாக வெளியாகி உள்ளது.
இந்த பில்டிங் மதிப்பு சுமார் 1.50 கோடி என கூறப்படுகிறது. இந்த நிலையில் கிரிஜாவிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்த சாம் சூரியநாராயணனுக்கு சொந்தமான பில்டிங் சம்பந்தமாக ஆவணங்கள் இருப்பதாகவும் அதனை அவரிடம் இருந்து திருடி கொண்டு வந்தால் அதனை வைத்து பணம் வாங்கிக்கொள்ளலாம் என்றும், அதற்கு காட்டேஜில் வேலைபார்த்த வரும் ஆறுமுகம் உதவியாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து சாம் தலைமையில் மொத்தம் 5 பேரை அவர் கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 13ஆம் தேதி கொடைக்கானலுக்கு வந்த இவர்கள் ஐந்து பேரும், சூரிய நாராயணன் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். தொடர்ந்து, மீண்டும் 22 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் காட்டேஜில் சூரிய நாராயணனை கொலை செய்துவிட்டு, காட்டேஜில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை அங்கிருந்து திருடி சென்றுள்ளனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து காட்டேஜில் வேலைபார்த்த ஆறுமுகம் காவல் துறையினருக்கு நடந்தது எதுவும் தெரியாதவாறு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை செய்த நிலையில், இந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்துள்ளனர். இதில் சாம், ரஞ்சித், கோகுல்நாத், கிஷோர், அக்ஷய், கார்த்தி, விக்னேஷ், கிரிஜா, கிரண், ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மகேந்திரன் தலைமறைவாகி உள்ளதால், அவரை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவர்களிடம் இருந்து தங்க மோதிரம், செயின் மற்றும் சொத்துக்கான ஆவணங்கள் மற்றும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN