டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று - ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி
சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.) டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி ப
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று - ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி


சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச முடிவு செய்தது. எனவே, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அக்ஷர் படேலும் அணியில் இடம் பெற்றார். தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களம் இறங்கினர். இதில் சாம்சன் அதிரடியாக விளையாடி 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய இஷான் கிஷன், அபிஷேக் சர்மாவுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அபிஷேக் சர்மா அரை சதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு வந்தார். அவர் 55 ரன்களில் அவுட் ஆனார். இஷான் கிஷன் 38 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா அதிரடியாக விளையாட, இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது. ஹர்திக் 23 பந்துகளில் 50 ரன்களும், திலக் 16 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. அந்த அணியில் பிரைன் பென்னட் மற்றும் மருமனி ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடியில் மருமனி 20 ரன்களில் அவுட் ஆக, அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய மேயர்ஸ் 6 ரன்களில் வெளியேறினார்.

அடுத்ததாக பிரைன் பென்னட்டுடன், கேப்டன் சிக்கந்தர் ராசா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட பிரையன் பென்னட் 34 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியில் சிக்கந்தர் ராசா 31 (21) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களம் இறங்கிய ரியான் பர்ல் (0) ரன் எதுவும் எடுக்காமலும், டோனி முனியோங்கா 11 ரன்களும், முசெகிவா 7 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.

இறுதியில் பிரைன் பென்னட் 59 பந்துகளில் 97 ரன்களும், எவன்ஸ் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். முடிவில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் பட்டேல் மற்றும் சிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதன்மூலம் ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

Hindusthan Samachar / JANAKI RAM