புழல் சிறை கைதிகள் வழக்கறிஞர்களை சந்திக்க கூடுதல் நேரம் ஒதுக்க கோரிய வழக்கு - தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவு
சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.தமிழழகன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை புழல் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்கான
உயர்நீதிமன்றம்


சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.தமிழழகன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், சென்னை புழல் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்கான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது.

கைதிகள் தங்களுக்கு உள்ள சட்ட உரிமை மூலம் நிவாரணம் தேட அவர்கள் தங்களின் வழக்கறிஞர்களின் உதவியை பெறுவதற்காக புழல் சிறையில் பார்வை நேரம் தரப்பட்டுள்ளது.

கைதிகளை வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பதற்காக 16 கேபின்கள் அமைக்கப்பட்டு தினமும் 3 முறை தலா அரை மணிநேரம் ஒதுக்கப்பட்டு வாய்ப்பு தரப்படுகிறது.

இதில் 8 கேபின்களில் தொலைபேசி மூலமாகவும், 8 கேபின்களில் நேரடியாகவும் கைதிகளுடன் பேச முடியும்.

அனுமதிக்கப்பட்ட அரை மணிநேரத்தில் 5 கைதிகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், கைதிகளுக்கு சட்டரீதியான ஆலோசனைகளை வழங்க முடியவில்லை. இதனால், கைதிகளின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது.

அதேபோல், விசாரணை கைதிகளுக்கும் வழக்கறிஞர்களை சந்திக்க போதுமான நேரம் தரப்படுவதில்லை.

சிறை நிர்வாகத்தின் இந்த குழறுபடியால் சிறை கைதிகளின் தங்கள் வழக்கறிஞர்களிடம் குறைகளை சொல்ல வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

எனவே, பார்வையாளர்களுக்கான கேபின்களை அதிகரிக்கவும், தினமும் 9 முறை கைதிகளை பார்க்க அனுமதிக்க கோரியும் கடந்த ஜனவரி 12ம் தேதி சிறைத்துறை கூடுதல் செயலாளர், சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுத்தேன்.

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, எனது மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, சிறைக் கைதிகளின் உரிமை முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. எனவே, கூடுதல் நேரமும், கூடுதல் கேபின்களையும் அமைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், விசாரணை கைதிகளுக்கு நீதி விரைந்து கிடைக்க வேண்டும். அவர்கள் நீதிமன்றத்தை அணுக உரிய வசதிகள் செய்யப்பட வேண்டும்.

இதற்காக தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழுவின் உறுப்பினர் செயலரை இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்க்கிறது. அவர் மனுதாரரின் கோரிக்கை குறித்து வழக்கறிஞரக்ளுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் விஜய் ஆனந்த் ஆஜராகி, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து விசாரணையை 4 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam