Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 28 பிப்ரவரி (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் இருந்து இராமேஸ்வரம், குற்றாலம், மதுரை, அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் விருதுநகர் உள்பட உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்ல திருச்சுழி பகுதியிலிருந்து நேரிடையாக பேருந்து வசதி இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்தில் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சுழியில் பல ஆண்டுகளாக பேருந்து நிறுத்தம் மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில் திருச்சுழியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதியமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு நிலத்தை திருச்சுழி புதிய பேருந்து நிலையம் அமைக்க கொடுத்த நிலையில் கடந்த 2024 செப்டம்பரில் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு சுமார் 6 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்த நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சி தலைவர் சுகபுத்ரா முன்னிலையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, சுகாதாரமான கழிப்பறை வசதி பேருந்துக்காக காத்திருக்க நல்ல தரமான இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
திருச்சுழி ஒன்றியப்பகுதியில் நீண்ட நெடுங்காலமாக மக்களுடைய கோரிக்கையாக இருந்து வந்த பேருந்து நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருச்சுழி பகுதியானது இன்றைக்கு வேகமாக முன்னேற்றம் காணக்கூடிய வளர்ந்து வரும் தொகுதியாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் சாலைகள் இல்லாமல் இருந்த இந்த பகுதி, தற்போது ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையில் மாவட்ட சாலைகள் மற்றும் மாநில நெஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சுழி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவமனை, தொழிற்பயிற்சி நிலையம், சமூக சுகாதாரக் கூடங்கள், மகளிர் காவல் நிலையங்கள் என அனைத்து வசதிகளிலும் முன்னேறி இருக்கக்கூடிய பகுதியாக மாறி வருகிறது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.6.18 கோடி மதிப்பில் 1097.22 சதுர மீட்டர் பரப்பளவில் பேருந்து நிற்கும் இடம், கடைகள், ஓய்வறை, மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இருசக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் சாலைகளாக இருந்தாலும் சரி, குடிநீராக இருந்தாலும் சரி அல்லது ஒவ்வொரு கிராமங்களுக்கும் இருக்கக்கூடிய அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
இதுபோன்ற மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam