நிலம், வீடு வாங்க புதிய விதி - பான் கார்டு வரம்பை உயர்த்தும் அரசு
சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.) நிரந்தர கணக்கு எண் என்று அறியப்படும் பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வரவுள்ளது. அதாவது புதிய வருமான வரி விதிமுறைகள் 2026-ன் படி சொத்து பரிமாற்றங்களுக்கு பான் கார்டு சமர்ப்பிக்கும் வரம்பை ரூ.10
நிலம், வீடு வாங்க புதிய விதி.. பான் கார்டு வரம்பை உயர்த்தும் அரசு - முழு விவரம்


சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)

நிரந்தர கணக்கு எண் என்று அறியப்படும் பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வரவுள்ளது.

அதாவது புதிய வருமான வரி விதிமுறைகள் 2026-ன் படி சொத்து பரிமாற்றங்களுக்கு பான் கார்டு சமர்ப்பிக்கும் வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த திருத்தம் நடைமுறைக்கு வந்தால், ரூ.20 லட்சத்திற்கும் குறைவான மதிப்புடைய சொத்து பரிமாற்றங்களுக்கு பான் கார்டு விவரங்கள் இனி அவசியம் இருக்காது. பான் கார்டு விதிமுறைகள் மட்டுமல்லாமல், வரி இணக்க கட்டமைப்பில் அன்பளிப்புகள் மற்றும் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தங்கள் போன்ற விஷயங்களையும் சேர்க்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு விதிமுறைகளின்படி,

ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளுக்கு பான் விவரங்களை அளிப்பதற்கான வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் 20 லட்சத்திற்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு பான் எண் தர வேண்டியதில்லை.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி, வீடு, நிலம், மனை போன்றவற்றை வாங்குதல் அல்லது விற்பனை செய்வதற்கான பரிவர்த்தனை மதிப்பு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், அதை வாங்குபவரும் விற்பவரும் அவர்களுடைய பான் கார்டு விவரங்களை அளிக்க வேண்டும்.

எனவே புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், சிறிய நகரங்கள் மற்றும் குறைந்த விலை சந்தைகளில் உள்ள சொத்து வாங்குபவர்கள் பயனடைவார்கள்.

ஏனெனில் குறைந்த மதிப்புள்ள ஒப்பந்தங்களில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் சுமை குறையும். அதுபோலவே நில உரிமையாளரும் டெவலப்பரும் இணைந்து ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது, அவற்றையும் பான் கார்டு விதிகளின் கீழ் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய திருத்தம் அதிகரித்து வரும் சொத்து விலைகள் மற்றும் சந்தை மதிப்பீடுகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிப்பதாக வரி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பான் கார்டு வரம்பை உயர்த்துவது, குறிப்பாக பெருநகரங்கள் அல்லாத மற்ற சிறிய நகரங்களில் நிலம் வாங்குபவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது சிறிய ஒப்பந்தங்களில் உள்ள ஆவணச் சிக்கலைக் குறைக்கும்.

இந்த விதிமுறைகள் தற்போது வரைவு நிலையில் உள்ளன. இறுதி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு மத்திய அரசு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெறும். அனைத்து ஆலோசனைகளையும் பரிசீலனை செய்த பிறகு தான் இந்த விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.

வாகனங்கள் வாங்கும் மக்களுக்கும் புதிய விதிமுறைகள் வர உள்ளன. அதாவது விரைவில் வரவிருக்கும் புதிய விதியின்படி ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை வாங்கினால் பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அதே போல் கார் வாங்கினாலும் பான் கார்டு அவசியம். இதற்கு டிராக்டர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டது போல, இப்போது வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் 2026 ஏப்ரல் 1 முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது அமலில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

ஆகவே தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு வருமான வரிச் சட்டங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.

Hindusthan Samachar / JANAKI RAM