Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 03 பிப்ரவரி (ஹி.ச.)
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று (பிப்ரவரி02) கலந்துகொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது, இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் உள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, விவாதத்திற்காகப் பட்டியலிடப்பட்ட தலைப்பில் இந்தியாவோ அல்லது சீனாவோ இடம்பெறவில்லை, தலைப்பின் கீழ் பேசும்படி அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவுறுத்தினர்.
இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று(பிப்ரவரி 03) மக்களவை கூடிய நிலையில், ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இன்று அவையை நடத்தி வரும் விஷ்ணு பிரசாத் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கிறேன். ஆனால் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேச வேண்டும் வேறு விஷயங்களை குறித்துப் பேசக்கூடாது எனத் தெரிவித்தார்.
அப்பொழுது ராகுல்காந்தி மீண்டும் நேற்று தொடர்ந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு தயாரானார். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. பாஜகவின் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவை தலைவர் விஷ்ணுபிரசாத், நான்கு முறை மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தும் ராகுல் காந்தி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கின்ற தீர்மானத்தின் மீது பேசாமல் வேறு விஷயங்களை பேசுகிறார்.
எனவே வேறு சிலருக்கு பேசுவதற்கு வாய்ப்பளிக்கிறேன் என குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து பல கட்சிகளின் உறுப்பினர்களை பேசுவதற்கு அழைத்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த ஹரிஷை பேச ஆரம்பித்தார்.
அப்பொழுது காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். குறிப்பாக மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் அங்கிருந்த மேஜைகள் மீது ஏறி ஆவணங்களைக் கிழித்து அவை தலைவர் மீது எறிந்தனர். பின்னர் பாஜகவினர் புகார் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட அமளியில் ஈடுபட்ட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மக்களவையில் அத்துமீறி நடந்துகொண்ட காரணத்துக்காக 374 -வது பிரிவின் கீழ் இந்த அமர்விலிருந்து 8 எம்பிக்களை நீக்கம் செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜு தீர்மானம் கொண்டு வந்தார்.
குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், மாணிக்கம் தாகூர், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல், எஸ். வெங்கடேசன் மற்றும் டீன் குரியகோஸ் உள்ளிட்டோர் இடைநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b