Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 3 பிப்ரவரி (ஹி.ச.)
வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்காமல் இருக்க எடுத்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால், பாகிஸ்தானை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முழுமையாக விலக்கி வைக்கவும், பாகிஸ்தான் அணியின் நிதி ஆதாரங்களை நிறுத்தி வைக்கவும் ஐ.சி.சி. பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருபது அணிகள் பங்கேற்கும் பத்தாவது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 8ஆம் தேதி வரை இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற உள்ளது.
இதில் 'சி' பிரிவில் வங்காளதேச அணி இடம் பெற்றிருந்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்தியாவுக்கு வர மறுத்த வங்கதேச அணி, உலகக் கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்து அணி மாற்றாகச் சேர்க்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்திய அணியுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு தீர்மானித்தது.
இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவோம் என்றும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் எதிர்வரும் 15ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM