Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 04 பிப்ரவரி (ஹி.ச)
இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு(66) சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது.
இந்த விவகாரத்தில் ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடனை சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக, அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணையில், அனில் அம்பானி, 17,000 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இரண்டு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
வங்கி கணக்குகளில் தணிக்கை மேற்கொண்டதில், 'ரிலையன்ஸ்' நிறுவனம் வாங்கிய கடன் தொகையை, வேறு நோக்கங்களுக்கு தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்த வழக்கு இன்று
(பிப்ரவரி 04) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அனில் அம்பானியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி ஆஜராகி, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் அனில் அம்பானி இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார் என உறுதி அளித்தார்.
இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு நபர் தப்பி ஓடமாட்டார் என்று உறுதி அளித்து இருந்தார். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார் என கூறி எதிர்த்தார்.
பின்னர் அனில் அம்பானியின் வங்கி மோசடி வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமலாக்கத்துறை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / vidya.b