இண்டிகோ விமானச் சேவையில் ஏற்பட்ட சிக்கல்கள் சம்பந்தமாக விரிவான அளவில் ஆய்வு செய்ய சிசிஐ உத்தரவு
புதுடெல்லி, 5 பிப்ரவரி (ஹி.ச.) விமானச் சேவையில் ஏற்பட்ட சிக்கல்கள் சம்பந்தமாக நியாயமற்ற வா்த்தக முறைகேடுகளில் ஈடுபட்டதாக இண்டிகோ விமான நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், இந்திய வா்த்தகப் போட்டி ஆணையம் (சிசிஐ) விரிவான அளவில் ஆய்வு
இண்டிகோ விமானச் சேவையில் ஏற்பட்ட சிக்கல்கள் சம்பந்தமாக விரிவான அளவில் ஆய்வு செய்ய சிசிஐ உத்தரவு


புதுடெல்லி, 5 பிப்ரவரி (ஹி.ச.)

விமானச் சேவையில் ஏற்பட்ட சிக்கல்கள் சம்பந்தமாக நியாயமற்ற வா்த்தக முறைகேடுகளில் ஈடுபட்டதாக இண்டிகோ விமான நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், இந்திய வா்த்தகப் போட்டி ஆணையம் (சிசிஐ) விரிவான அளவில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உட்பட பணியாளா்கள் பற்றாக்குறையினால், சென்ற வருடம் டிசம்பா் மாதம் இண்டிகோ விமானச் சேவைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன.

இதன் விளைவாக நாட்டின் பல நகரங்களில், அந்த நிறுவனத்துடைய அதிகமான விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார்கள்.

விமானச் சேவையில் உருவான குளறுபடிக்காக இண்டிகோ நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.22.2 கோடி வரை அபராதம் விதித்தது.

இந்நிலையில், சிசிஐ வெளியிட்ட உத்தரவில்,

'ஏராளமான விமானங்களை ரத்து செய்து, தனது சேவைகளை நிறுத்தியதன் விளைவாக, விமானங்கள் கிடைப்பதில் செயற்கையான தட்டுப்பாட்டை இண்டிகோ உண்டுபண்ணியது.

விமானப் போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிறுவனத்தின் இந்த செயல்பாடு, தொழில் போட்டிச் சட்டத்தின் 4 (2)(பி)(ஐ) பிரிவுக்கு முரணானது (அந்த சட்டத்தின் 4-ஆவது பிரிவு என்பது பிற நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், ஒரு நிறுவனம் தனக்கு இருக்கும் ஆதிக்க நிலையை தவறாக பயன்படுத்துவதுடன் தொடர்புடைய பிரிவு).

ஆகவே இந்த விஷயம் தொடர்பாக சிசிஐ தலைமை இயக்குநரின் கூர்ந்த விசாரணைக்கு ஆணையிடப்படுகிறது.'

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM