Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 பிப்ரவரி (ஹி.ச.)
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக இ-ஷ்ரம் இணையதளத்தை (eshram.gov.in) அறிமுகப்படுத்தியது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு யுனிவர்சல் கணக்கு எண் (யுஏஎன்) வழங்கப்படுகிறது.
இ-ஷ்ரம் அட்டை - முக்கிய தகவல்:
இந்த அட்டையுடன் மத்திய அரசின் பல்வேறு முக்கிய திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொழிலாளர்கள் எந்தெந்த திட்டங்களின் மூலம் பயனடையலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதான் மந்திரி தெரு வியாபாரிகள் ஆத்மநிர்பர் நிதி, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின், ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புறம், பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி, ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை மற்றும் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா போன்ற திட்டங்கள் இந்த அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இ-ஷ்ரம் அட்டை கணக்கு தொடங்குவது எப்படி?
இ-ஷ்ரம் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலமாக இந்த அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். அருகிலுள்ள இ-சேவை மையம், உமாங் செயலி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
இ-ஷ்ரம் அட்டைக்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களான தினக்கூலிகள், சாலையோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், விவசாயிகள் போன்றோர் இந்த அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இ-ஷ்ரம் அட்டைக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்.
- வயது 16 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் வருமான வரி செலுத்துபவராகவோ அல்லது EPFO மற்றும் ESIC உறுப்பினராகவோ இருக்கக் கூடாது.
- அமைப்பு சாரா தொழிலாளராக இருக்க வேண்டும்.
- ஆதார் அட்டை, மொபைல் எண், வங்கி கணக்கு, கல்விச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்கள் தேவை.
இ-ஷ்ரம் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை,
- முதலில், அதிகாரப்பூர்வ இ-ஷ்ரம் இணையதளமான eshram.gov.in பக்கத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் வலதுபுறம் உள்ள 'Register on e-Shram' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- திரையில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டைப் பதிவு செய்யவும்.
- உங்களுக்கு EPFO அல்லது ESIC கணக்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு 'இல்லை' என்பதைத் தேர்வு செய்து, 'Send OTP' என்பதைக் கொடுக்கவும்.
- உங்கள் மொபைலுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு, உங்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்யவும்.
- அதன் பின் உங்கள் பெயர், முகவரி, கல்வித் தகுதி, செய்யும் தொழில் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை ஒவ்வொன்றாகப் பூர்த்தி செய்யவும்.
- அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, அவற்றை ஒருமுறை சரிபார்த்து 'Submit' என்பதைக் கொடுக்கவும்.
- இப்போது உங்கள் 12 இலக்க யுனிவர்சல் அக்கவுண்ட் எண் கொண்ட ஈ-ஷ்ரம் அட்டை திரையில் தோன்றும். அதை நீங்கள் பிடிஎஃப் ஆக பதிவிறக்கம் செய்தோ அல்லது பிரிண்ட் எடுத்தோ வைத்துக்கொள்ளலாம்.
ஈ-ஷ்ரம் அட்டையின் நன்மைகள்:
விபத்துக் காப்பீடு - பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மூலம் விபத்தினால் இறப்பு ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரையிலும், ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வரையிலும் காப்பீடு கிடைக்கும்.
அரசு நலத்திட்டங்கள் - பேரிடர் காலங்களில் அரசு வழங்கும் நேரடி பண உதவி உங்கள் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
வேலைவாய்ப்பு - உங்கள் திறமைக்கேற்ப எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
உங்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்யத் தெரியவில்லை என்றால், உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
மேலும் சந்தேகங்களுக்கு 14434 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம்.
Hindusthan Samachar / JANAKI RAM