Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை மதுரவாயல் பாரதியார் தெருவை சேர்ந்தவர் வர்ஷா(20).இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சக்திவேல் (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் சில மாதங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வர்ஷா தன் கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் தாய் வீட்டில் வசித்து வரும் ஷர்ஷாவை அவரது கணவர் அடிக்கடி அங்கு சென்று வீண் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் கடந்த ஆண்டு மே மாதம் சக்திவேல் தன் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி வர்ஷாவிடம் வீண் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில் காயமடைந்த வர்ஷா இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த சக்திவேல் தன் மனைவியை பழிவாங்க வேண்டும் என எண்ணத்தில் நேற்று இரவு தன் நண்பருடன் சென்று மனைவி வர்ஷா வீட்டின் மீது இரு நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அப்போது வர்ஷா வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அவரது சித்தி சங்கீதா அவரது கணவர் இருவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.நல்லவேளையாக இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் பைக்கில் தப்பி சென்ற சக்திவேலை அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி பிடிக்க முயன்ற போது கத்தியை காட்டி மிரட்டி பணம் விட்டு நண்பருடன் பைக்கில் தப்பிச் சென்றதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வர்ஷா இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீஸார் நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தலைமறைவான அவரது நண்பரை போலீஸார் தேடிவருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ