மத்திய கூட்டுறவுத் துறை அறிமுகம் செய்யும் பாரத் டாக்ஸி - புதிய மொபைல் செயலி
புதுடெல்லி, 5 பிப்ரவரி (ஹி.ச.) ஓலா, உபர் போன்ற டிஜிட்டல் வாகன சேவை நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக, பாரத் டாக்ஸி எனும் புதிய மொபைல் செயலியை மத்திய கூட்டுறவுத் துறை இன்று அறிமுகம் செய்கிறது. இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால், கார், ஆட்டோ
இன்று மத்திய கூட்டுறவுத் துறை அறிமுகம் செய்யும் பாரத் டாக்ஸி - புதிய மொபைல் செயலி


புதுடெல்லி, 5 பிப்ரவரி (ஹி.ச.)

ஓலா, உபர் போன்ற டிஜிட்டல் வாகன சேவை நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக, பாரத் டாக்ஸி எனும் புதிய மொபைல் செயலியை மத்திய கூட்டுறவுத் துறை இன்று அறிமுகம் செய்கிறது.

இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால், கார், ஆட்டோ போன்ற வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் பெறும் வருமானத்தில் எந்த விதமான கமிஷனும் வசூலிக்கப்படாது என்பதே.

புது தில்லியில் பாரத் டாக்ஸி செயலியை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்.

ஆரம்பகட்டமாக சுமார் 2.5 லட்சம் வாகனங்கள் இந்த செயலியில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலா, உபேர், ரேபிடோ போன்ற செயலிகளைப் போலவே, பாரத் டாக்ஸி செயலியிலும் பைக், ஆட்டோ மற்றும் கார்களை வாடகைக்கு அமர்த்தலாம். அதுமட்டுமின்றி, உள்ளூர் பயணம், வெளியூர் பயணம் மற்றும் சென்று திரும்பும் பயணங்களுக்கும் இதில் வசதி உள்ளது.

பாரத் டாக்ஸி செயலியை பயன்படுத்தும் ஓட்டுநர்கள் கமிஷன் தொகையிலிருந்து விடுபட்டு, தாங்களே உரிமையாளர்களாக செயல்படலாம். வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் முழு தொகையும் அவர்களுக்கே. அதில் எந்தவித கமிஷனும் பிடித்தம் செய்யப்படாது.

மாறாக, ஓட்டுநர்கள் செயலி பராமரிப்புக் கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ. 30 மட்டும் செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள ஓலா, உபேர் போன்ற செயலிகளை விட பாரத் டாக்ஸி சுமார் 30 சதவீதம் குறைந்த கட்டணத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் செயலிகள் ஒரு பயணத்திற்கு ரூ. 30 முதல் 50 வரை ஓட்டுநர்களிடமிருந்து கமிஷன் வசூலிக்கிறார்கள். ஆனால், பாரத் செயலியில் இந்த சுமை குறையும்.

இந்த செயலியில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளமைக்கப்பட்டுள்ளன, மேலும் அவசர உதவிக்கான பிரத்யேக தொலைபேசி எண்ணும் உள்ளது. அதோடு, பயணிகளின் புகார்களை உடனடியாக கவனிக்க தில்லி காவல்துறையுடன் இணைந்து 35 சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த செயலியில் பதிவு செய்துள்ள ஓட்டுநர்களின் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த செயலி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தில்லி மற்றும் குஜராத்தில் முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சோதனையில், தினமும் சராசரியாக 5,500 பயணங்கள் பதிவு செய்யப்பட்டன. அதில் 4,000 விமான நிலைய பயணங்களும் அடங்கும்.

இதுவரை 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இந்த செயலியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்த செயலி கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டு தளங்களிலும் கிடைக்கிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், பாரத் டாக்ஸி செயலி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் நகரங்களிலும் விரிவுபடுத்தப்படும், மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM