குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றம்
புதுடெல்லி, 05 பிப்ரவரி (ஹி.ச.) கடந்த மாதம் ஜனவரி 28-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-ந் தேதியில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடை
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றம்


புதுடெல்லி, 05 பிப்ரவரி (ஹி.ச.)

கடந்த மாதம் ஜனவரி 28-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

2-ந் தேதியில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டு வருவதால், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்து பேச முடியவில்லை.

இந்நிலையில் இன்று

(பிப்ரவரி 05) லோக்சபா காலையில் கூடியதுமே, எம்.பி.க்கள் கடும் அமளியில் இறங்கியதால், கேள்வி நேர அலுவல்கள் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 12:00 மணிக்கு சபை கூடியது.

மீண்டும் அவை கூடியதும் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை சபாநாயகர் ஓம் பிர்லா வாக்கெடுப்புக்குவிட்டார். அவை நிராகரிக்கப்பட்டன.

பின்னர், ஜனவரி 28-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார். எதிர்க்கட்சி எம்பிக்களின் எதிர்ப்பு முழக்கங்களுக்கு மத்தியில் அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எம்பிக்கள் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை. இதனால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா உத்தரவிட்டார்.

ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என பிரதமர் மோடி உரையை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.

இதனிடையே, பிரதமரின் பதிலுரை இல்லாமலேயே, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது. மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு பதிலுரை அளிக்கிறார் .

Hindusthan Samachar / vidya.b