Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 05 பிப்ரவரி (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தா கேந்திராவளாகத்தில், கேந்திரா நிர்வாகம் வழங்கிய ஐந்தரை ஏக்கர் நிலத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22.5 கோடி செலவில் வெங்கடா சலபதி கோயில் கட்டுமானப்பணி கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி தொடங்கியது.
2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் மேல்தளத்தில் வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள், கருடாழ்வாருக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் கீழ்தளத்தில் இரண்டாயிரம் பக்தர்களுக்கு மேல் அமரும் வண்ணம் சீனிவாசா கல்யாண அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மூலவரின் எதிரே கருடாழ்வார் மற்றும் 40 அடி உயர கொடி மரம் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் வருஷாபிஷேக விழாவை நாளை மறுநாள் (7.2.2026) நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் அறிவுரை வழங்கி உள்ளார். அதன்படி வருஷாபிஷேக விழாவிற்கான பணிகள் நடைபெறுகின்றன.
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 7-ந்தேதி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவையும் அதைத் தொடர்ந்து 8 மணிக்கு புண்ணியாகவாசனம், அங்குரார்ப்பணம், ரக்சாபந்தனம், விசேஷ ஹோமம், அஸ்டோத்திர ஸத கலசாபிஷேகம், உற்சவமூர்த்திக்கு மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, அச்சதாரோபனம் போன்றவை நடைபெறுகின்றன.
வருஷாபிஷேகம்அதைத்தொடர்ந்து சதாகலசாபிஷேக பூஜை நடக்கிறது. அதன் பிறகு சுவாமிக்கு திருமஞ்சனம் சாத்துதலும் 11 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. பின்னர் ஹோமம், யாகம், அபிஷேகத்தைத் தொடர்ந்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறவுள்ளது.
இந்த பூஜைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் தலைமையில் திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் 3 பேரும் கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர்களும் நடத்துகிறார்கள்.
பின்னர் பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் லோகேஷ், கண்காணிப்பாளர் லட்சுமிபதி ஆகியோர் செய்துவருகிறார்கள்.
Hindusthan Samachar / vidya.b