Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 6 பிப்ரவரி (ஹி.ச.)
இன்று காலை 11:00 மணிக்கு லோக்சபா கூடியதும், எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு சபையில் உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டதை வலியுறுத்தி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் ஐந்தாவது நாளாகவும் ஸ்தம்பித்தன.
ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களின் உரையுடன், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது.
கடந்த 1-ம் தேதி, 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்பிக்கள் உரையாற்றினர்.
பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையூறு விளைவித்தனர். இதன் காரணமாக, பிரதமர் மோடியின் உரையின்றியே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், லோக்சபா இன்று காலை திட்டமிட்டபடி கூடியது.
எட்டு எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம், எதிர்க்கட்சித் தலைவருக்கு அவையில் பேச அனுமதி மறுப்பு, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
பதாகைகளை ஏந்தியவாறு அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது.
சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் செவிசாய்க்கவில்லை.
அமளி தொடர்ந்ததால், சபையை இன்று 12:00 மணி வரை ஒத்திவைத்தார்.
அதே நேரத்தில், ராஜ்யசபா காலை 11:00 மணிக்கு கூடியது. அங்கு அலுவல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
மசோதாக்கள் மீதான விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM