Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 பிப்ரவரி (ஹி.ச)
பள்ளி மாணவர்கள் தங்களது தேர்வுகளை நேர்மையுடனும், தன்னம்பிக்கையுடனும் அணுகுவது குறித்து பரிக்ஷா பே சர்ச்சா (தேர்வு பற்றிய விவாதம்) என்ற தலைப்பில் மாணவர்களுடன் ஆண்டுதோறும் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் சிபிஎஸ்சி பள்ளிகளில் +2 மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கவுள்ளன. இந்த நிலையில், மாணவ, மாணவிகளுடன் உரையாடிய காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 06) காலை வெளியிட்டுள்ளார்.
அதில், தன்னம்பிக்கை மற்றும் நேர்மறையாக தேர்வுகளை அணுகுவது குறித்து மாணவர்களுடன் நடத்திய அருமையான கலந்துரையாடல் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் தேவமோக்ரா, கோயம்புத்தூர், ராய்ப்பூர் மற்றும் குவஹாத்தியில் உள்ள 'எக்ஸாம் வாரியர்ஸ்' மாணவர்களும், டெல்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள மாணவர்களும் பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடலில் மாணவர்களுடன் மோடி பேசியதாவது:
உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது சக நண்பர்கள் என்ன கூறினாலும், உங்களுக்கு தோன்றும் யோசனைகளை மனதில் வைத்து, அதனைப் பின்பற்றுங்கள்.
நமது இலக்கு எப்போதும் அடையக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் எளிதில் இலக்கை அடைய முடியாது. உங்கள் ஆசிரியர்களை விட ஒரு படி மேலே இருங்கள்.
வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சமநிலை இருக்க வேண்டும். நீங்கள் ஒரு பக்கம் அதிகமாக வளைந்தால் விழுந்துவிடுவீர்கள். வாழ்க்கைத் திறன்களும் தொழில்சார் திறன்களும் சம அளவில் முக்கியமானவை. அவை கல்வி மூலமாக மட்டுமே பெற இயலும்.
கல்வியை சுமையாக நினைக்கக்கூடாது. அதற்கு நமது முழு ஈடுபாடும் தேவை. மதிப்பெண்களில் கவனம் செலுத்துவதை விட, ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வெற்றி உங்கள் பெற்றோரின் மரியாதையாக மாறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமருடனான கலந்துரையாடலில் சொந்தமாக இயக்கிய பாடல்களை மாணவர்கள் பாடினர்.
இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற, அனைத்து மாணவர்களுக்கும் அஸ்ஸாமின் பாரம்பரிய சால்வையான கமோசாவை பிரதமர் அணிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b