Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 பிப்ரவரி (ஹி.ச)
நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளின் மீது மிகுந்த நம்பிக்கையுள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள், குறிப்பாக பெண் உறுப்பினர்கள், பிரதமருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சில நாட்களாக, நாடாளுமன்ற மக்களவையில் இந்திய - அமெரிக்க ஒப்பந்தம், சீன ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கேள்வி எழுப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி செய்தன.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் உரையாற்றும் போது, ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்திலிருந்து சில பகுதிகளை எடுத்து படிக்க ஆரம்பித்தார். பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன், சபாநாயகர் ஓம்பிர்லா புத்தகத்திலிருந்து எதையும் படிக்கக் கூடாது என்று கூறினார்.
அந்த புத்தகத்திலிருந்து வெளியான சில பகுதிகள் கேரவான் என்கிற ஆங்கில இதழில் 39 பக்க கட்டுரையாக வெளிவந்திருந்தது. அதிலிருந்து சில பகுதிகளை படிக்க முற்பட்ட போது அதையும் படிக்கக் கூடாது என பா.ஜ.க.வினரும், சபாநாயகரும் தடுக்க முற்பட்டனர்.
தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தனது உரையில், அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பகுதி கடந்த ஆகஸ்ட் 31, 2020 இரவு 10.30 மணிக்கு சீன எல்லையான கல்வான் பகுதியில் சீன துருப்புகள் டாங்கிகளுடன் சில மைல் தூரம் உள்ளே நுழைந்து விட்டதாகவும், அப்போது ராணுவ தளபதி மேஜர் நரவானே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள என்ன செய்வது என்று உத்தரவிடுங்கள் என பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், இறுதியாக ராஜ்நாத் சிங், பிரதமரோடு என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதை செய்யுங்கள் என்று பிரச்சினையை தட்டிக் கழித்ததை, அந்நூலில் நரவானே பதிவு செய்திருக்கிறார்.
அதைத் தான் தலைவர் ராகுல்காந்தி மேற்கோள் காட்டி இந்திய நாட்டின் பாதுகாப்பு சம்மந்தமான பிரச்சினைகளில் நரேந்திர மோடியும், ராஜ்நாத் சிங்கும் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு இந்தியாவின் இறையாண்மையை சீனாவுக்கு தாரை வார்த்ததாக குற்றம் சாட்டி பேசினார். ஆனால், தலைவர் ராகுல்காந்தி அவர்களை பேச விடாமல் தடுத்து கூச்சல் எழுப்பியதோடு, அவரது ஒலிபெருக்கியும் துண்டிக்கப்பட்டது. புத்தகத்திலிருந்து எந்த பகுதியையும் படிக்கக் கூடாது என்று கூறுகிற ஓம்பிர்லா, மறுநாள் பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் துபே, பண்டித நேருவைப் பற்றியும், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றியும் தடை செய்யப்பட்ட அவதூறான புத்தகங்களை சபையில் காட்டிய போது அதிலிருந்து சில பகுதிகளை படிப்பதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளித்தார். இதன்மூலம், சபாநாயகர் நாடாளுமன்ற நடைமுறை மரபுகளை மீறி, பாரபட்சமாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பேசிய பிறகு, பிரதமர் உரையாற்றுவது நாடாளுமன்ற மரபாகும். ஆனால், ராகுல்காந்தி அவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதற்கு துணிவற்ற பிரதமர் நரேந்திர மோடி, அன்று பதில் கூறாததோடு சபைக்கு வருவதையும் தவிர்த்தார். ஆனால், மறுநாள் பிரதமர் நரேந்திர மோடியை சபைக்கு வர வேண்டாம் என்றும், வந்தால் மக்களவை காங்கிரஸ் பெண் உறுப்பினர்கள் எஸ். ஜோதிமணி, சுதா ராமகிருஷ்ணன், வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்ட உறுப்பினர்களால் பிரதமர் தாக்கப்படுவார் என்கிற சூழல் இருந்ததால்,
அவரை அவைக்கு வர வேண்டாம் என்று நான் தான் கூறினேன் என சபாநாயகர் ஓம்பிர்லா கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எதிர்கட்சித் தலைவரை பேசவிடாமல் தடுத்ததை கண்டித்து தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளின் மீது மிகுந்த நம்பிக்கையுள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள், குறிப்பாக பெண் உறுப்பினர்கள், பிரதமருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று சபாநாயகர் ஓம்பிர்லா கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும். இதன்மூலம் சபாநாயகர் என்கிற புனிதமான பதவிக்கு ஓம்பிர்லா களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை உருவாக்கி, வளர்த்து செழுமைப்படுத்திய காங்கிரஸ் கட்சி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் நரேந்திர மோடியும், சபாநாயகர் ஓம்பிர்லாவும் கூறுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக செயல்பட வேண்டும். நாணயத்தின் ஒருபக்கம் சேதமடைந்தாலும் அது செல்லாததாகி விடும்.
அத்தகைய மரபுகளை வளர்த்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மீது வன்முறை நடத்த முற்பட்டார்கள் என்று கூறுவதை நாட்டு மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள். ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய நூலின் மூலம் நாட்டின் பாதுகாப்பை எந்த அளவிற்கு விட்டுக் கொடுத்து துரோகம் செய்தார்கள் என்பதை இன்றைக்கு, தலைவர் ராகுல்காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார். அதை எதிர்கொள்ள துணிவற்ற நரேந்திர மோடி, ஆதாரமற்ற அவதூறுகளை பேசுவது அவரது பலகீனத்தையே வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b