Enter your Email Address to subscribe to our newsletters

காஸியாபாத், 6 பிப்ரவரி (ஹி.ச.)
உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில், கொரிய விளையாட்டுக்கு அடிமையாகியிருந்த மூன்று இளம் பெண்கள் தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சுமார் பத்து நாட்களுக்கு முன்பு, அந்த மூன்று சகோதரிகளுக்கும் அவர்களது தந்தைக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, அவர்கள் நடத்தி வந்த யூடியூப் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. இதுவே அவர்களின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த சகோதரிகள் கொரிய நாடகங்கள் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்களை மையமாக வைத்து யூடியூப் சேனல் தொடங்கி, அதில் காணொளிகளை பதிவேற்றம் செய்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த தந்தை, அவர்களைக் கண்டித்திருக்கலாம் என்றும், கொரிய கலாச்சாரத்தில் மூழ்கிப் போன தனது மகள்களைப் பற்றி அவர் கவலைப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
உயிரிழந்த நிஷிகா (16), பிரச்சி (14), பாக்கி (12) ஆகிய மூன்று சகோதரிகளும் கொரோனா பொது ஊரடங்குக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லாமல், வீட்டில் கொரிய நாடகங்களுக்கு அடிமையாகி, அந்த விளையாட்டுகளில் முழு ஈடுபாட்டுடன் இருந்துள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
வீட்டின் பால்கனி வழியாக ஒருவர் பின் ஒருவராக குதித்து அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இது தற்கொலைதான் என்பதை உடற்கூறு ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணையின்போது,அந்த மூன்று சிறுமிகளும் எப்பொழுதும் கொரியா செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்ததாக அவர்களின் தந்தை சேத்தன் குமார் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எல்சா, சின்ட்ரெல்லா போன்ற கதாபாத்திரங்களைப் போல் அலங்காரம் செய்து புகைப்படங்கள் மற்றும் குறும்படிகளை அவ்வப்போது பதிவேற்றி வந்துள்ளனர்.
மற்ற யூடியூபர்களைப் போல தங்கள் மகள்களும் குறும்படிகளின் மூலம் புகழ் பெறுவார்கள் என்று எண்ணி, தந்தைதான் அவர்களுக்கு இரண்டு கைபேசிகளை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் கொரிய நாடகங்களுக்கு அடிமையாகி, கொரிய கலாச்சாரத்திற்கு ஈர்க்கப்பட்டு, கொரியாவுக்கு செல்ல வேண்டும் என்று விரும்பியதால், தந்தை அந்த கைபேசிகளை ஒவ்வொன்றாக விற்றுள்ளார்.
கொரிய நாடகங்களைப் பார்த்து, அவர்கள் ஒரு தனி உலகத்தில் வாழ ஆரம்பித்தனர். அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களை மாற்றவும் முடியவில்லை என்று தந்தை விசாரணையின்போது வேதனையுடன் கூறியுள்ளார்.
அவர்கள் பெரும்பாலும் தனிமையில் அறைக்குள்ளேயே இருந்துள்ளனர். அவர்களின் அறையின் சுவரில் என் வாழ்க்கை மிகவும் தனிமையானது என்று எழுதப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, சிறுமிகளுக்கும் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கொரியா செல்ல வேண்டும் என்று தந்தையிடம் கேட்டுள்ளனர். பின்னர் மூவரும் அவர்களின் அறைக்குள் சென்றுள்ளனர். நள்ளிரவு 2 மணியளவில் மூவரும் ஒரு அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு, அங்கிருந்த ஜன்னலைத் திறந்து கீழே குதித்துள்ளனர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தந்தை விற்ற இரண்டு கைபேசிகளில் ஒன்று கைப்பற்றப்பட்டு, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM