Enter your Email Address to subscribe to our newsletters

கம்பம், 6 பிப்ரவரி (ஹி.ச.)
கம்பம் பள்ளத்தாக்கில் பன்னீர் திராட்சையும், ஓடைப்பட்டி பகுதியில் விதையில்லா திராட்சையும் பயிரிடப்படுகின்றன.
இதில் பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
விதையில்லா திராட்சைக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கம்பம் பகுதியில் மழை மற்றும் பனிக்காலங்களில் செவட்டை நோய், அடிச்சாம்பல் நோய், மகசூல் பாதிப்பு, எதிர்பார்த்த விலை கிடைக்காதது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.
இது குறித்து முந்தைய ஆட்சியர் ஷஜீவனா, திராட்சை ஆராய்ச்சி நிலையத்திற்கும், தோட்டக்கலைத் துறைக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சி முகாம்களை நடத்த அறிவுறுத்தினார்.
எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திராட்சை விவசாயிகளுக்காக ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் எந்த வித தொழில்நுட்ப ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்படவில்லை.
எனவே,திராட்சை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்துதல் பிரச்சினைகளைத் தீர்ப்பது, அதிக மகசூலுக்கான வழிமுறைகள் பற்றி எடுத்துரைக்க வேண்டும்.
மேலும், வெப்பம் மற்றும் அதிக மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றியும் விளக்க வேண்டும்.
அனுபவம் வாய்ந்த முன்னோடி விவசாயிகளை அழைத்து, அவர்களின் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆகவே, திராட்சை ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத் துறை ஆகியவை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், சந்தைப்படுத்துதல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க வேளாண் வணிகத் துறையும் இணைந்து செயல்பட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM