Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.
அதன்படி பிளஸ் 2 வகுப்பு மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்பு மார்ச் 3ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியரின் தேர்வில் பங்கேற்க உள்ளவர்களின் பெயர் பட்டியல்களை சரிபார்க்கும் பணியை தேர்வுதுறை நடத்தி முடித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தேர்வு எழுத தகுதியுள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி மாதம் செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், பிளஸ் 2 வகுப்புக்கு பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு 23ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b