Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 06 பிப்ரவரி (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான்பட்டி 16-வது வார்டு பகுதியில் சுமார்
500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் கழிவு நீர் தேங்கி செல்லையா பிள்ளை தெரு வழியாக செல்வதால் காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இப்பகுதிக்கு முறையாக கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் கழிவு நீர் கால்வாய் செல்லும் கால்வாய் பகுதிகளை மண்ணைக் கொட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர் காவல் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற வந்தவர்களிடம் கையில் பெட்ரோல் கேனுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து நகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் கால்வாயில் கொட்டப்பட்ட மண்ணை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றினர்.
இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b