ஆன்லைன் ஏமாற்று வேலை - பணம் இழந்தவர்களுக்கு ரூ.25000 நஷ்டஈடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை
சென்னை, 7 பிப்ரவரி (ஹி.ச.) இந்தியா முழுவதும் யுபிஐ, இணைய வங்கி போன்ற ஆன்லைன் டிஜிட்டல் பண பரிமாற்றம் அதிகரித்துள்ளது. அதிலும் யுபிஐ மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதால் நிறைய பேர் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர். இருப்ப
ஆன்லைன் ஏமாற்று வேலை - பணம் இழந்தவர்களுக்கு ரூ.25000 நஷ்டஈடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை


சென்னை, 7 பிப்ரவரி (ஹி.ச.)

இந்தியா முழுவதும் யுபிஐ, இணைய வங்கி போன்ற ஆன்லைன் டிஜிட்டல் பண பரிமாற்றம் அதிகரித்துள்ளது. அதிலும் யுபிஐ மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதால் நிறைய பேர் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் சிலர் யுபிஐ, இணைய வங்கி, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவை மூலம் மோசடி செய்கின்றனர்.

அதாவது மோசடி செய்பவர்கள் கைபேசியில் அழைத்து ஒருமுறை கடவுச் சொல்லைக் (OTP) கேட்டும், இணைப்புகளை அனுப்பி பணத்தைப் பிடுங்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுதவிர டிஜிட்டல் கைது என்ற பெயரில் பணத்தைத் திருடும் சம்பவமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதேநேரம் இத்தகைய மோசடிகளைத் தடுக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

ஆனால் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து மோசடி செய்பவர்கள் பணத்தைத் திருடும் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை காக்க புதிய நடவடிக்கையை அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

சமீபத்தில் மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதில் டிஜிட்டல் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பது தொடர்பான புதிய வழிமுறைகளை கொண்டு வருவது தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

மேலும் டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதற்காக 2017-ல் வெளியிடப்பட்ட வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும். அதிலும் சிறிய அளவிலான மோசடி பணப் பரிவர்த்தனைகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான வழிமுறைகள் விரைவில் பொது மக்களின் ஆலோசனைக்காக வெளியிடப்படும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

அதுவும் மூத்த குடிமக்கள் போன்றவர்களுக்கு கூடுதலான அங்கீகரிப்பு முறைகள் கொண்டுவரப்படும் எனவும், நிறைய மோசடி கும்பல்கள் மூத்த குடிமக்களைத்தான் குறி வைக்கிறார்கள் என்பதால் கூடுதல் அங்கீகாரம் சரிபார்க்கும் நடைமுறைகள் கொண்டுவரப்படும் எனவும் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக ஒருமுறை கடவுச் சொல்லுடன் (OTP)கூடுதல் சரிபார்ப்பு, கடவுச் சொல், உயிரியளவியல் போன்ற பல்வேறு சரிபார்ப்பு முறைகள் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இதுபோன்ற புதிய வழிமுறைகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மிக பெரிய பாதுகாப்பைக் கொடுக்கும். இந்த புதிய வசதி எல்லா வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் உங்களது கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் வரும் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தேவையில்லாத செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதில் அளிப்பதை தவிர்க்கவும். குறிப்பாக யுபிஐ (UPI) விவரங்களை அல்லது OTP-ஐ பகிர்வதை தவிர்க்கவும்.

கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் மூலம் அதிகாரப்பூர்வ செயலிகளை (apps) மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். தெரியாத அல்லது உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும் உங்களது வங்கி கணக்கின் செயல்பாடுகளை அவ்வப்போது கவனிக்க வேண்டும்.

ஏதாவது அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து தெரிந்தால் உடனடியாக உங்களது வங்கிக்கு தெரிவிக்கவும்.

Hindusthan Samachar / JANAKI RAM