டி20 உலகக் கோப்பை - அமெரிக்காவை தோற்கடித்து வெற்றியுடன் பயணத்தைத் துவங்கிய இந்தியா
மும்பை, 8 பிப்ரவரி (ஹி.ச.) இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் களைகட்டுகிறது. இதில் 20 அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. அவை ஒவ்வொன்றும் 5 அணிகள் வீதம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆ
டி20 உலகக் கோப்பை - அமெரிக்காவை தோற்கடித்து வெற்றியுடன் பயணத்தைத் துவங்கிய இந்தியா


மும்பை, 8 பிப்ரவரி (ஹி.ச.)

இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் களைகட்டுகிறது.

இதில் 20 அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. அவை ஒவ்வொன்றும் 5 அணிகள் வீதம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான 3-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணியும், அமெரிக்க அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் படேல் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். எனவே, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆட்டத்தை தொடங்க அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷான் களம் இறங்கினர். ஆனால், அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க அணியின் துல்லியமான பந்துவீச்சால் இஷான் கிஷான் 20 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும், ஷிவம் துபே டக் அவுட் ஆகி வெளியேறினர்.

பின்னர் ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் 14 ரன்கள் எடுத்தார். ஆனால், சூர்யகுமார் யாதவ் நிலைத்து ஆடி ரன் வேட்டை ஆடினார். பந்துகளை சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி அரைசதம் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்தது. இதில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 84 ரன்கள் எடுத்தார். அமெரிக்க அணியில் ஷாட்லி வான் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அமெரிக்க அணி களம் இறங்கியது.

அமெரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சீக்கிரமே விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் மிலிந்த் குமார் மற்றும் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மிலிந்த் குமார் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். சுபம் ரன்ஜனேவுடன் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி சேர்ந்தார்.

சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 37 ரன்களில் ரிங்கு சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சுபம் ரன்ஜனே 37 ரன்களில் எல்.பி.டபில்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த ஆட்டக்காரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

முடிவில் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 உலக கோப்பை தொடரில் வெற்றியுடன் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM