Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 பிப்ரவரி (ஹி.ச.)
எஸ்எம்எஸ் பிளாஸ்டர் என்பது கள்ளத்தனமான மொபைல் கோபுரமாக உருமாறும் ஒரு கருவி.
பொதுவாக, மொபைல் போன்கள் அருகில் இருக்கும் சரியான கோபுரத்துடன் இணைக்கப்படும். ஆனால், சைபர் கிரிமினல்கள் இந்த கருவிகளைப் பயன்படுத்தி ஒரு போலியான கோபுரத்தை உருவாக்கி, உண்மையான சிக்னலை செயலிழக்கச் செய்து, 500 மீட்டர் சுற்றளவில் இருக்கும் அலைபேசிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்கள் போலியான எஸ்எம்எஸ் குண்டுகளால் துளைக்கப்படுகிறார்கள்.
4G அல்லது 5G வேகத்திலிருந்து, பழமையான 2G வேகத்திற்கு மாறும் போது இது அரங்கேறுகிறது. 2Gயில் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதால், செய்தியை அனுப்புபவரின் விவரங்களை கையாளுவது மோசடி கும்பலுக்கு எளிதாகிறது. HDFC-BANK, SBI-SEC அல்லது வருமான வரி போன்ற பெயர்களில் இருந்து குறுஞ்செய்திகள் வருவது போல ஒரு மாயையை உருவாக்கி, நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றனர்.
இத்தகைய செய்திகளில் ஆபத்தான எச்சரிக்கைகள் அல்லது ஆசையைத் தூண்டும் சலுகைகள் நிரம்பி வழியும். வங்கியின் KYC நிலுவையில் உள்ளது, வெகுமதி புள்ளிகள் காலாவதியாகப் போகின்றன, நிலுவையில் உள்ள கட்டணங்கள் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற மிரட்டல்கள், முகவரியைப் புதுப்பிக்கக் கோரும் கூரியர் அறிவிப்புகள் அல்லது பகுதி நேர வேலை தொடர்பான கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் போன்ற ஆபத்தான தூண்டில்கள் வீசப்படுகின்றன. இது போன்ற செய்திகளில் இருக்கும் இணைப்புகளைத் தொட்டால், வங்கி ரகசியங்கள் அம்பலமாகலாம், தனிப்பட்ட தகவல்களைத் திருடலாம், OTP மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளில் கூட ஊடுருவலாம்.
சமீபத்திய விசாரணைகளில், இது போன்ற மோசடிகள் காட்டுத்தீ போல் பரவி வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டிசம்பர் 2025-இல், சிபிஐ டெல்லி, நொய்டா மற்றும் சண்டிகரில் அதிரடி சோதனைகள் நடத்தி, தினமும் லட்சக்கணக்கானோருக்கு போலி செய்திகளை அனுப்பிய ஒரு பெரிய வலைப்பின்னலை வேரறுத்தது. நூற்றுக்கணக்கான USB மையங்கள், சர்வர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான போலி சிம் கார்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஜனவரி 2026-இல், சைபராபாத் போலீசார், போலி வர்த்தக செயலிகள் மற்றும் வங்கி எச்சரிக்கைகள் மூலம் சுமார் ரூ.5 கோடிக்கு மேல் மோசடி செய்த 25 நபர்களை கைது செய்தனர். குற்றவாளிகள் பரபரப்பான இடங்களில் SMS பிளாஸ்டர் கருவிகளை நிறுவி, மக்களை ஏமாற்றும் நோக்கில் வங்கி எச்சரிக்கைகளுக்கு இணையான பெயர்களில் செய்திகளை அனுப்பினர். இந்த கும்பலுக்கு கம்போடியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.
2024-25க்குள் தொலைத்தொடர்பு தொடர்பான மோசடி வழக்குகள் 300% உயர்ந்துள்ளன. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) தகவல்களின்படி, 2025-இல் சைபர் மோசடி புகார்கள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளன.
குடிமக்கள் சுமார் ரூ.30,000 கோடிக்கு மேல் இழந்துள்ளனர், மேலும் 40 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன. 15 லட்சத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான சிம் கார்டுகள் மற்றும் 5,00,000க்கும் மேற்பட்ட மொபைல் எண்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இருப்பினும், இழந்த பணத்தில் 10-12% மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது.
2G இணைப்பை முடக்குவது, வங்கி அல்லது சேவை வழங்குநரிடமிருந்து வந்ததாகக் கூறும் எந்தவொரு செய்தியையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது நல்லது.
உங்கள் அலைபேசியில் 4G அல்லது 5G சிக்னல்கள் மறைந்து, 2G மட்டுமே காட்டும் போது, அது ஒரு ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம்.
Hindusthan Samachar / JANAKI RAM