Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 9 பிப்ரவரி (ஹி.ச.)
பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியின் ஒன்பதாவது அங்கத்தின் சிறப்புப் பதிப்பில், மாணவச் செல்வங்கள் மத்தியில் தன்னம்பிக்கையையும், மன உறுதியையும், துணிவையும் விதைத்த பிரதமர் நரேந்திர மோடி, தன்னை நம்புகிறவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள் என்று ஆணித்தரமாக கூறினார்.
தேர்வுகள் என்பது வாழ்க்கையின் இறுதிப் புள்ளி அல்ல, அவை உங்களை நீங்களே எடைபோட்டு, மெருகேற்றிக் கொள்ளும் பொன்னான வாய்ப்பு என்று அவர் அறிவுறுத்தினார். சரியான வழிகாட்டுதலுடன், இடைவிடாத பயிற்சியும், சீரான வாழ்க்கை முறையும் இருந்தால், மாணவர்கள் தேர்வில் மட்டுமல்ல, தங்கள் வாழ்வின் இலக்குகளையும் எளிதில் அடையலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று ஒளிபரப்பான இந்த சிறப்பான நிகழ்வில், பிரதமர் மோடி அவர்கள் கோயம்புத்தூர், தமிழ்நாடு, ராய்ப்பூர், சத்தீஸ்கர்; கௌஹாத்தி, அசாம், மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்களுடன் மனம் திறந்து கலந்துரையாடினார்.
இந்த முறை தேர்வு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி மிகவும் தனித்துவமானது மற்றும் சிறப்பானது என்று அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள் அவர்களுடன் கலந்துரையாட அழைக்கப்பட்டிருந்தனர்.
மாணவர்களுடன் ஒருமித்து அமர்ந்து ஒருவருக்கொருவர் அறிவை பரிமாறிக்கொள்ளும் முயற்சியே இது என்று பிரதமர் விளக்கினார்.
கோயம்புத்தூர் மாணவர்களுடன் உரையாடிய பிரதமர், ஒழுக்கம் என்பது வாழ்க்கையில் உத்வேகத்தை அதிகரிக்கும் ஒரு சக்தி என்று கூறினார். கட்டுப்பாடு இல்லாவிட்டால், எவ்வளவு ஊக்கம் இருந்தாலும் அது சுமையாக மாறி விரக்தியில் முடியக்கூடும். சரியான நேரத்தில் வேலை செய்யாவிட்டால் பயிர்கள் காய்ந்து போவது போல, ஒழுக்கம் இல்லாவிட்டால் படிப்பிலும், வாழ்க்கையிலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகிவிடும் என்று ஓர் உதாரணத்தின் மூலம் தெளிவுபடுத்தினார். மாணவர்கள் படிப்பையும், ஆர்வத்தையும் வெவ்வேறாகப் பார்க்காமல், இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்து முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
புதிய தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மீது மாணவர்கள் காட்டிய ஆர்வத்தைப் பாராட்டிய அவர், ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளையும் கண்டு அஞ்சத் தேவையில்லை, அதே சமயம் நாம் அதற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். மொபைல் போன் மோகம் குறித்து பேசிய அவர், தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர, அதில் மூழ்கி விடக்கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ராய்ப்பூர் மாணவர்களுடன் பேசியபோது, கல்விக்கும் விளையாட்டுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விளையாடினால், நீ ஜெயிப்பாய் என்பது வெறும் வாசகம் அல்ல, அது வாழ்க்கையின் தாரக மந்திரம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியும் முக்கியம் என்பதை உணருங்கள் என்றார். மாணவர்கள் கொண்டு வந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளான தேத்ரி மற்றும் குர்மி ஆகியவற்றை ருசித்து பிரதமர் அந்த இடத்தையே கலகலப்பாக மாற்றினார்.
தேர்வுக்கு தயாராவது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், எழுத்துப் பயிற்சி மிக முக்கியமான பழக்கம். மனப்பாடம் செய்வது மன அழுத்தத்தை அதிகரிக்கும், ஆனால் தொடர்ந்து எழுதுவது தன்னம்பிக்கையை வளர்க்கும். தேர்வுக்கு தயாராகும் போது நல்ல தூக்கத்தின் அவசியத்தை வலியுறுத்திய அவர், போதுமான தூக்கம் மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும், மேலும் புதிய எண்ணங்களைத் தூண்டும் என்று கூறினார்.
கௌஹாத்தி மாணவர்களுடன் உரையாடிய பிரதமர் அவர்கள், தலைமைப் பண்புகள் பற்றி கலந்துரையாடினார். தேர்தலில் ஜெயிப்பது மட்டும் தலைமைப் பண்பு ஆகாது, சரியானதைச் செய்யத் தயங்காமல் முடிவெடுப்பதே ஒரு நல்ல தலைவனின் இலக்கணம் என்று அவர் கூறினார். யார் செய்தாலும் செய்யாவிட்டாலும், நான் சரியானது செய்வேன் என்று நீ தீர்மானித்தால், தலைமைப் பதவி தானாகவே உன்னை வந்து சேரும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
மாணவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து, பலவீனமான மாணவர்களுக்கு ஆதரவு அளித்து, தொடர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். வாழ்க்கையில் திருப்தி என்பது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும். எனவே உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டு முன்னேற பாடுபடுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
'பரிக்ஷா பே சர்ச்சா்' நிகழ்வின் மூலம், தன்னம்பிக்கை, கட்டுப்பாடு, சமநிலை மற்றும் அச்சமில்லாத சிந்தனை ஆகியவை மாணவர்களை தேர்வுகளில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வெற்றி பெறச் செய்யும் என்பது பிரதமரின் செய்தியாக இருந்தது.
Hindusthan Samachar / JANAKI RAM