எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
புதுடெல்லி, 09 பிப்ரவரி (ஹி.ச.) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி (28.01.2026) தொடங்கியது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு


புதுடெல்லி, 09 பிப்ரவரி (ஹி.ச.)

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி (28.01.2026) தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்த கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வான 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 01ஆம் தேதி (01.02.2026) காலை 11 மணியளவில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தொடர், வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

மக்களவையில் திட்டமிட்டபடி நடவடிக்கைகள் தொடங்கியது. ஜிம்பாப்வேயின் ஹராரேவில் நடந்த உலகக் கோப்பை வெற்றிக்கு இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் கேள்வி நேரம் தொடங்கப்பட்டது, ஆனால் அமர்வு தொடங்குவதற்கு முன்பே, காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிடத் தொடங்கினர். சபாநாயகர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் கண்ணியத்தைப் பேணி, கேள்வி நேரத்தைத் தொடர அனுமதிக்குமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தார்.

அவையை நடத்துவது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்றும், கேள்வி நேரத்திற்குப் பிறகு அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இதையும் மீறி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து எழுந்த கூச்சல் மற்றும் கோஷங்கள் காரணமாக, மக்களவை தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவையில் விவாதிக்க ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்துவிட்டார். தொடர்ந்து மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசனை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Hindusthan Samachar / vidya.b