Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 9 பிப்ரவரி (ஹி.ச.)
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது.
20 அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இந்த தொடரில், அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் சூடு பிடிக்கின்றன.
நேற்றைய 5-வது ஆட்டத்தில் இங்கிலாந்து - நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
களம் இறங்கிய இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஹாரி புரூக் இருவரும் மின்னல் வேகத்தில் அரைசதம் விளாசினர். முடிவில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 184 ரன்களை குவித்தது.
185 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நேபாள அணியில் ஆசிப் ஷேக் (7), குஷல் 29 ரன்கள், கேப்டன் ரோகித் பௌடெல் 39 ரன்கள், தீபிந்திர சிங் 44 ரன்களை எடுத்தனர். விக்கெட்டுகள் சரிந்தாலும், நேபாள அணி ரன் குவிப்பில் வேகம் காட்டியது.
லோகேஷ் பாம் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். இதனால், நேபாள அணிக்கு கடைசி 6 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
லோகேஷ் மற்றும் கரண் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், லோகேஷ் பாம் 1 ரன் மட்டுமே எடுத்ததால் நேபாளம் அணி போராடி தோல்வியடைந்தது.
இதன் மூலம் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
Hindusthan Samachar / JANAKI RAM