இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடவில்லை - திருச்சி சிவா எம்.பி. மாநிலங்களவை தலைவருக்கு கடிதம்
புதுடெல்லி, 09 பிப்ரவரி (ஹி.ச) கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி (28.01.2026) காலை 11 மணியளவில் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாள
இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடவில்லை - திருச்சி சிவா எம்.பி. மாநிலங்களவை தலைவருக்கு கடிதம்


புதுடெல்லி, 09 பிப்ரவரி (ஹி.ச)

கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி (28.01.2026) காலை 11 மணியளவில் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்த கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வான 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 01ஆம் தேதி (01.02.2026) காலை 11 மணியளவில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்த நடவடிக்கையின் மூலமாக இந்தியா மீதான அமெரிக்காவின் வரி 18%மாக குறைந்துள்ளது. இதன் மூலமாக ஜவுளி, தோல், ரசாயன பொருட்களின் மீதான வரி குறையும் என இரு நாடுகளும் கூட்டாக அறிவித்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என அமெரிக்க தெரிவித்திருந்த நிலையில் இந்திய பொருட்கள் மீதான 25% கூடுதல் வரியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் ரத்து செய்திருந்தார். அதாவது ஏற்கனவே வழக்கமான வரியான 25%த்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்ட நிலையில் கூடுதலாக விதிக்கப்பட்ட 25% வரியும் ரத்து செய்யப்பட்டது

இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே செய்தியாளர் சந்திப்பு நடத்திய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக, திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார்.

இது தொடர்பாகத் திருச்சி சிவா எம்.பி., மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த விவரங்களை முறைப்படி நாடாளுமன்றத்தில் முதலில் வெளியிடவில்லை. அதாவது நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை அல்லது மக்களவையில் முதலில் விவரங்களை வெளியிட்டிருக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொருபுறம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b