Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வந்த போர் பதற்றத்தின் உச்சகட்டமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த தகவல் வெளியானதை அடுத்து, டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், லக்னோ மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் துக்க ஊர்வலங்கள் நடந்தன.
போர் அபாயம் அதிகரித்துள்ளதால் ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். படுகொலை செய்யப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் புகைப்படத்தை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
Hindusthan Samachar / vidya.b