Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 01 மார்ச் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோடாங்கி நாயக்கன்பட்டியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் அபிராமி தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் விவசாயிகளின் மண் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் பார்த்தீனியம் களை மூலம் கம்போஸ்ட் தயாரித்தல் குறித்த பயிற்சி மற்றும் செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
வயல் மற்றும் பொது இடங்களில் பரவலாக காணப்படும் பார்த்தீனியம் களையை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி, பயனுள்ள உயிர் உரமாக மாற்றும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பயிற்சியின் போது பார்த்தீனியம் களை சேகரிக்கும் பாதுகாப்பு முறைகள், நறுக்குதல், அடுக்கி வைப்பது, உயிர்செயலூக்கிகள் சேர்த்தல், ஈரப்பத மேலாண்மை, கம்போஸ்ட் தயாரிக்கும் காலம் மற்றும் பயன்படுத்தும் முறை ஆகியவை நேரடி செய்முறை மற்றும் விளக்கப்படங்கள் மூலம் விளக்கப்பட்டது.
பார்த்தீனியம் கம்போஸ்ட் பயன்படுத்துவதால் மண் உயிரியல் செயல்பாடு அதிகரித்து, பயிர் வளர்ச்சி மேம்படும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது சந்தேகங்களை எழுப்பினர்.
குறைந்த செலவில் தயாரிக்கக்கூடிய இந்த உயிர் உரம் மூலம் ரசாயன உர பயன்பாட்டை குறைக்க முடியும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த பயிற்சி மூலம் விவசாயிகளுக்கு களை மேலாண்மை மற்றும் உயிர் உர தயாரிப்பு குறித்த நடைமுறை அறிவு கிடைத்ததுடன், கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வேளாண்மை நடைமுறைகள் கிராம மட்டத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட முக்கிய முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
இதில் நிலக்கோட்டை கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Hindusthan Samachar / Durai.J