போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோரிக்கை
சென்னை, 10 மார்ச் (ஹி.ச.) மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் மொத்த சமையல் எரிவாயு இறக்குமதியில் 85 முதல் 90% வரை மத்திய கிழக்கு நாடுகளில் இ
address the gas shortage


சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் மொத்த சமையல் எரிவாயு இறக்குமதியில் 85 முதல் 90% வரை மத்திய கிழக்கு நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.

எனவே சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, மத்திய அரசு அவசர அதிகாரத்தைப் பயன்படுத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பெங்களூரு மற்றும் சென்னை போன்ற நகரங்களில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b