போதையில் அட்டூழியம் செய்த மகனை கொலை செய்த தாய் கைது!
நெல்லை, 10 மார்ச் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அடுத்த கலைக்கோவில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள், மாயாண்டி என்ற மகன் என 4 பிள்ளைகள் உள்ளனர். கண்ணனும் அவரது மகன் மாயாண்டியும் (27) கிருஷ்ணாபுரம் பேருந்து ந
Nellai


நெல்லை, 10 மார்ச் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அடுத்த கலைக்கோவில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள், மாயாண்டி என்ற மகன் என 4 பிள்ளைகள் உள்ளனர். கண்ணனும் அவரது மகன் மாயாண்டியும் (27) கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் அருகே கறிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கடையின் வருமானம் அனைத்தையும் மாயாண்டி எடுத்து, மது போதைக்கு போன்ற பழக்கங்களுக்கு வீண் செலவுகள் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும்,கடையில் வரும் வருமானத்தை வீட்டிற்கு கொடுக்காமல் இருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி மாயாண்டி வீட்டில் பிரச்சினை நடந்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவும், வழக்கம்போல் மது போதையில் வீட்டிற்கு சென்ற மாயாண்டி, தாய் மற்றும் தந்தையிடம் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும், தாய் லதாவை (56) சரமாரியாக அடித்ததில், அவர் வலி தாங்க முடியாமல் துடித்துள்ளார்.

‘வளர்த்த கிடா நெஞ்சில் பாயுதே’ என்பது போல லதாவின் நிலைமை இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல், அருகில் இருந்த கத்தியை எடுத்து மாயாண்டியை லதா தாக்கியுள்ளார்.

இதில், மாயாண்டியின் நெஞ்சில் கத்தி இறங்கி படுகாயம் அடைந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மாயாண்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன் மகனை தானே கொலை செய்து விட்டதாக காவல்துறையினருக்கு லதா தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக, அவசர ஊர்தியுடன் சிவந்திபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்த மாயாண்டியை பரிசோதித்த சுகாதாரத்துறை ஊழியர்கள், அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இதனையடுத்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட லதாவை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாயாண்டி தனது தாய் மற்றும் உடன்பிறந்த சகோதரிகள் தந்தை என அனைவரையும் அவதூறாக பேசியும், தாக்கியும் வந்துள்ளதாக தெரிகிறது.

அவரது நடவடிக்கைகளால் நொந்து போன தாய் வேறு வழியின்றி கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN