நேபாள தேர்தலில் வெற்றி பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, 10 மார்ச் (ஹி.ச.) இந்தியாவின் அண்டை தேசமான நேபாளத்தின் முந்தைய பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய கலகத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். இதன் விளைவாக கே.பி.சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை துறந்தார்.
நேபாள தேர்தலில் வெற்றி பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து


புதுடெல்லி, 10 மார்ச் (ஹி.ச.)

இந்தியாவின் அண்டை தேசமான நேபாளத்தின் முந்தைய பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய கலகத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.

இதன் விளைவாக கே.பி.சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை துறந்தார்.

இதனைத் தொடர்ந்து நேபாளத்தின் தற்காலிக பிரதமராக சுஷிலா கார்கி சென்ற செப்டம்பர் மாதம் பதவி ஏற்றார்.

அதன் பின் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ராஷ்டிரிய சுதந்திர கட்சி, நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்டன.

ராஷ்டிரிய சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராப் இசை கலைஞர் பலேந்திர ஷா களம் இறங்கினார்.

நேபாள பாராளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர்.

அதில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், 110 உறுப்பினர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அதன்படி, 165 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், 124 இடங்களில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி வெற்றி அடைந்துள்ளது.

ராஷ்டிரிய சுதந்திர கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பலேந்திர ஷா பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில், நேபாள தேர்தலில் வெற்றி பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது;-

ராஷ்டிரிய சுதந்திரக் கட்சியின்(RSP) நிறுவனர் ரபி லாமிச்சானே மற்றும் மூத்த தலைவர் பாலேந்திர ஷா ஆகியோருடன் தொலைபேசி உரையாடல்களை மேற் கொண்டேன்.

தேர்தல் வெற்றிகளுக்காகவும், நேபாளத் தேர்தல்களில் ராஷ்டிரிய சுதந்திரக் கட்சியின் மகத்தான வெற்றிக்காகவும் இரு தலைவர்களையும் வாழ்த்தினேன்.

நமது இரு நாடுகளின் பரஸ்பர செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்காக நேபாளத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது.

நமது கூட்டு முயற்சிகளால், வரும் ஆண்டுகளில் இந்தியா மற்றும் நேபாள உறவுகள் புதிய உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM