Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 10 மார்ச் (ஹி.ச.)
புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இயக்குனரகம் சார்பில் கம்பன் கலையரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கும் நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி இன்று கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது,
விளையாட்டு வீரர்களுக்கு அனைவருக்கும் ஊக்கத்தொகை தர ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்வோம். கல்வித்துறையுடன் விளையாட்டுத்துறை இணைந்து இருந்ததால் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அதனால் தனித்துறையாக விளையாட்டுத்துறையை கொண்டு வந்துள்ளோம்.
பயிற்சியாளர்களுக்கு முன்பு ரூ. 10 ஆயிரம் ஊதியம் தந்த நிலையில், தற்போது ரூ. 50 ஆயிரம் தருகிறோம். சோர்ந்திருந்த பயிற்சியாளர்களுக்கு தெம்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கும் ஊதியம் உயர்த்தி தந்துள்ளோம்.
விளையாட்டில் அதிகளவில் பங்கு கொண்டு அதிக பதக்கம் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. போட்டியில் பங்கேற்க வடநாட்டுக்கு செல்ல பணம் இல்லாமல் சிரமம் படுவார்கள். தனிப்பட்ட முறையில் தந்தோம். இப்போது தனிநிதி ஒதுக்கி, வீரர்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலம் செல்ல அரசே உதவும்.
அரசு நிதியிலேயே இனி செல்லலாம். கிராமங்களில் விளையாட்டு திடல் அதிகம் தேவை. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டுதிடல்களை மேம்படுத்த ரூ.200 கோடி தருவதாக சொல்லியுள்ளார். பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் அரசு பணிக்கு சென்றுள்ளனர். இந்த நம்பிக்கையும் அரசு தந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு தந்துள்ளோம்.
அரசு பணியில் 5 ஆயிரம் பேருக்கும், தனியாரில் 8 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பை அளித்துள்ளோம். ஐடி பார்க், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகளை கொண்டு வரவுள்ளதால் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம்.
புதுச்சேரியில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பை, ஷூ வாங்கி தர தேர்தல் நேரத்தில் சிரமம். அதனால் இரண்டும் வாங்க ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
உடனடியாக 80 ஆயிரம் குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். குழந்தைகளின் பெற்றோரில் தாய் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், சட்டப்பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / vidya.b