Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 மார்ச் (ஹி.ச.)
குஜராத் மாநிலத்தில் தொலைதூரப் பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் நோக்கில், கட்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலைப் பாதையை மேம்படுத்துவதற்கான ரூ. 650.42 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று (மார்ச் 11) ஒப்புதல் அளித்தார்.
தேசிய நெடுஞ்சாலை-754K-இன் 165.58 கிலோமீட்டர் நீளமுள்ள லக்க்பத்–கடுலி–ஜாரா–ஹாஜிபீர்–காவ்தா–கந்தவன்–தோலாவிரா வரையிலான பகுதியை, இருவழிச் சாலையாகவும், இருபுறமும் தார் பூசப்பட்ட துணைச் சாலைகளுடனும் (paved shoulder) அமைப்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
இந்த நெடுஞ்சாலைப் பாதை கட்ச் மாவட்டத்தின் மக்கள் தொகை குறைவாக உள்ள பல பகுதிகள் வழியாகச் செல்கிறது. இம்மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளையும் சாலைக் கட்டமைப்பையும் மேம்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் பதிவிட்டிருப்பதாவது,
கட்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலைப் பாதையை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு சுமார் ரூ. 650.42 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டுப் பணி, கட்ச் பகுதிக்கும் குஜராத்தின் பிற பகுதிகளுக்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவதோடு, அப்பகுதியில் பொருளாதார மற்றும் சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிக்கும்.
கட்ச் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பல்வேறு முக்கியத் திருவிழாக்களும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன; இவை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்க்கின்றன.
இத்தகைய முக்கிய இடங்கள் பலவற்றிற்குச் செல்வதற்கு, இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ள இந்த நெடுஞ்சாலைப் பாதையே முக்கியத் துணையாக அமைகிறது. மேம்படுத்தப்பட்ட இந்த நெடுஞ்சாலை, அப்பகுதி வாழ் மக்களுக்கும் அங்கு வரும் பார்வையாளர்களுக்கும் பயண அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பகுதியின் கனிம மற்றும் உப்புத் தொழில்களுடன் தொடர்புடைய பொருட்களின் போக்குவரத்தை இந்த நெடுஞ்சாலை எளிதாக்கும்.
உற்பத்தி செய்யப்படும் உப்புகள் மற்றும் கனிமங்களை வெட்டியெடுப்பதில் நாட்டின் முக்கிய மையங்களில் ஒன்றாக கட்ச் திகழ்கிறது. எனவே, மேம்படுத்தப்பட்ட சாலைக் கட்டமைப்பானது, இத்துறைகள் சார்ந்த சரக்குப் போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெரிதும் துணைபுரியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும், அதிக அளவிலான விபத்துகளும் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருவழிச் சாலையாகவும், இருபுறமும் தார் பூசப்பட்ட துணைச் சாலைகளுடனும் மேம்படுத்தப்படவுள்ள இத்திட்டம், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட சாலைக் கட்டமைப்பின் விளைவாக, எரிபொருள் நுகர்வு குறைவதோடு, வாகனங்களின் இயக்கம் மேலும் சீராக அமையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் முழுமையாக நிறைவுபெற்றதும், கட்ச் மாவட்டத்தின் பெரும்பகுதிக்குச் பாதுகாப்பான மற்றும் திறமையான போக்குவரத்து வசதியை இது வழங்கும். அதேவேளையில், தொலைதூரக் கிராமங்களுக்கும் குஜராத்தின் பரந்து விரிந்த சாலைப் போக்குவரத்து வலைப்பின்னலுக்கும் இடையிலான இணைப்பையும் இது மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
Hindusthan Samachar / vidya.b