Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 மார்ச் (ஹி.ச.)
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று தொடங்கியது. நேற்றைய விவாதத்தின் போது, மேற்காசிய போர் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது.
இந்தத் தீர்மானத்தில் சுமார் 118 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர். இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் முகமது ஜாவேத், கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் மல்லு ரவி ஆகியோர் இந்தத் தீர்மான நோட்டீஸை வழங்கினர்.
இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் இன்று (10.03.2026) தொடங்கியது.அவையை மூத்த எம்பி ஜெகதாம்பிகா பால் நடத்தி வருகிறார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பி., கே.சி. வேணுகோபால் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாகத் துணைச் சபாநாயகரை மத்திய அரசு நியமிக்கவில்லை. இது அரசியலமைப்பு ரீதியான ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது சபையை வழிநடத்த ஒருவரைச் சபை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றும் கூறினார். அதற்குப் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.பி., ரவிசங்கர் பிரசாத், “எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகள் ஆதாரமற்றவை எனக் கூறினார்.
சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு அனுமதி மறுக்கிறார் என எதிர்க்கட்சி எம்பிக்கள் தெரிவித்தனர்.
பா.ஜ. தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கு அவையில் தனிப்பெரும்பான்மை உள்ளதால், இத்தீர்மானம் தோற்கடிக்கப்படுவது உறுதி என பாஜக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b