Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 மார்ச் (ஹி.ச.)
காவல்துறையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டாலின் அவர்களே... சட்டம்-ஒழுங்கை சீரழித்து தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதுதான் உங்களது ஆகப்பெரும் சாதனை என்று அதிமுக கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் கௌதமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,
ஸ்டாலின் அவர்களே, இன்னும் எத்தனை பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு பலியான பிறகு, உங்கள் ஆட்சியில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை மக்கள் முன்பு ஒப்புக்கொண்டு எப்போது பொறுப்பேற்பீர்கள்?
சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பெண்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை ஸ்டாலின் அவர்களுக்கு துளிகூட இல்லை என்ற உண்மையை மீண்டும் மீண்டும் உறுதிபடுத்துகிறது.
இந்த திராவிட மாடல் விடியா திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. அதில் 1700-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் இடம்பெற்றுள்ளன.
எதற்கெடுத்தாலும் “எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி” என்று வெற்று பெருமை பேசும் ஸ்டாலின் அவர்களே, உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்களின் வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. இதுதானா நீங்கள் நடத்தும் ஆட்சியின் லட்சணம்?
கடந்த வாரம்தான் அதே சிவகங்கை மாவட்டத்தில், பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் கிராமத்துக்குள் புகுந்த கும்பல் கண்ணில் பட்டவர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்தது. அதேபோல், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி இரண்டு பேரை கொலை செய்தது.
இன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிலேயே பெட்ரோல் குண்டு தாக்குதல் நடக்கிறது என்றால், இந்த மாநிலத்தில் சாமானிய மக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN