Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 மார்ச் (ஹி.ச.)
ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் இதில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் கூறியதாவது,
வணிக பயன்பாட்டுக்கு எல்பிஜி சிலிண்டர்களை வழங்க வேண்டாம் என்று எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. நிலைமை நாள்தோறும் மோசமாகிறது. மத்திய அரசு நாட்டு மக்களிடம் பொய்களைக் கூறி வருகிறது, என குற்றம் சாட்டினார்.
மற்றொரு காங்கிரஸ் எம்.பி. கே. சுரேஷ் கூறுகையில்,
நாட்டில் CNG நெருக்கடி மிகவும் தீவிரமாக உள்ளது. உண்மையான நிலையை அரசு வெளிப்படுத்தவில்லை. பல ஹோட்டல்கள் மற்றும் தொழில்கள் மூடப்பட்டுள்ளன. நிலைமை மிகவும் மோசமாக இருந்தாலும், கவலைப்பட வேண்டியதில்லை என்று அரசு கூறுகிறது.
ஆனால் ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் நிலைமை தீவிரமாக இருப்பதாகக் கூறுகின்றனர். அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது என குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / vidya.b