மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – இரண்டாவது குற்றவாளியும் கைது
செங்கல்பட்டு, 11 மார்ச் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அத்திவாக்கம் பகுதியில் 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவ
கைது


செங்கல்பட்டு, 11 மார்ச் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அத்திவாக்கம் பகுதியில் 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆவடி பகுதியை சேர்ந்த பாலாஜி (எ) காக்கா பாலாஜி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று தாமு என்ற தாமோதர பெருமாளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் கௌதமன், நேற்று நள்ளிரவு தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களுடன் தனது சொந்த ஊரான மதுராந்தகம் அருகே கீழக்காண்டை பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தேவத்தூர் அருகே மது அருந்திக் கொண்டிருந்த இரண்டு பேர், அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த கௌதமன் வாகனத்தை வேகமாக ஓட்டிய நிலையில், அத்திவாக்கம் பகுதியில் வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

அப்போது காயமடைந்த ஒரு பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு, மற்றொரு பெண்ணை மட்டும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கௌதமன் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், காயமடைந்த பெண்ணை அத்திவாக்கம் ஏரி பகுதிக்கு தூக்கிச் சென்று இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இரவு முழுவதும் அங்கேயே இருந்த அந்த பெண், அதிகாலை தானாகவே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது நடந்த சம்பவம் குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Hindusthan Samachar / GOKILA arumugam