Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 மார்ச் (ஹி.ச.)
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பெரிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்ததன் விளைவாக பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் இருவர் தலைமையிலும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர்.
இதற்கிடையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி, அன்புமணி தலைமையிலான பாமக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
ராமதாஸ் தலைமையிலான பாமக அணி எந்த அணியில் இடம் பெறும் என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் உள்ளது.
இதனிடையே, பாமகவிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு குறித்தான கடிதத்தைத் தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பாக, பாமகவில் அன்புமணியின் தலைவர் பதவி கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.
ஆனால், தற்போதும் அவர் பாமகவில் தலைவராக இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
அதனால், அவரின் முகவரிக்குச் சென்ற கடிதத்தை ரத்து செய்துவிட்டு தங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ராமதாஸ் தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்யவேண்டுமென கூறியது.
அதன்படி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்ற ராமதாஸ் தரப்பு, உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தன்னை பா.ம.க தலைவராக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் இந்த மனு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மற்றும் அன்புமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் வந்த போது அன்புமணி தரப்பில், ராமதாஸுக்கு தற்போது 87 வயதாகிவிட்டது.
வயது மற்றும் மருத்துவ காரணங்களால் அவரால் நிர்வாக முடிவுகள் எடுக்கும் நிலையில் இல்லை. கட்சியின் நிறுவனர் என்ற அடிப்படையில் கட்சிக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மட்டுமே அவரால் வழங்க முடியும்.
இது தவிர வேறு ஒன்றும் அவர் செய்ய முடியாது. பா.ம.க.வில் பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது. எனவே ராமதாஸ் தொடர்ந்த வழக்கானது விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராமதாஸ் தரப்பில் 13 பக்க பதில் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
பா.ம.க சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கு தொடர்வதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அன்புமணி ராமதாஸ் பா.ம.க கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். அவர் கட்சியால் அங்கீகரிக்கப்படாதவர். மேலும் அவர், தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.
பா.ம.க சட்ட விதியில் திருத்திய தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி தலைவராக இருந்த காலகட்டத்தில் கட்சியினுடைய செயல்பாடுகளும், அவரது செயல்பாடுகளும் மோசமாக இருந்த காரணத்தினால் பா.ம.கவினுடைய அங்கீகாரம் பரிபோய்விட்டது.
அதற்கு அன்புமணி தான் காரணம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b