Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 12 மார்ச் (ஹி.ச)
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கீழ ஆவாரம்பட்டியைச் சேர்ந்த பாண்டி (26) என்ற இளைஞர் கடந்த 2019-ம் ஆண்டு புளியங்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தார்.
அப்போது, வாசுதேவநல்லூர் கங்கை அம்மன் கோவில் மேலத் தெருவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பேருந்து பயணத்தின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 15.03.2019 அன்று தேர்வு எழுதிவிட்டு திரும்பிய சிறுமியை, பாண்டி ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். சங்கரன்கோவில் வழியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் வைத்து சிறுமிக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமி மாயமானது குறித்து அவரது தந்தை பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாண்டி சிறுமியைக் கடத்திச் சென்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி பி. ராஜவேல், குற்றம் சாட்டப்பட்ட பாண்டிக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.11,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Hindusthan Samachar / vidya.b