பெண் விவசாயிகளுக்குத் தலைமை தாங்க வாய்ப்பு வழங்க வேண்டும் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
புதுடெல்லி, 12 மார்ச் (ஹி.ச.) புதுடெல்லியில் இன்று நடைபெற்ற ''வேளாண்-உணவு அமைப்புகளில் பெண்களின் பங்கு'' குறித்த உலகளாவிய மாநாட்டின் (GCWAS-2026) தொடக்க அமர்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மூன்று ந
GCWAS-2026


புதுடெல்லி, 12 மார்ச் (ஹி.ச.)

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற 'வேளாண்-உணவு அமைப்புகளில் பெண்களின் பங்கு' குறித்த உலகளாவிய மாநாட்டின் (GCWAS-2026) தொடக்க அமர்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை வேளாண் அறிவியல் முன்னேற்ற அறக்கட்டளை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு, தாவர வகைகளைப் பாதுகாத்தல் மற்றும் விவசாயிகள் உரிமைகள் ஆணையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

விவசாய உணவு முறைகளில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை உலகளவில் அங்கீகரிக்கும் அதே வேளையில், கொள்கை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் விவசாயத்தில் பாலின முக்கிய நீரோட்டத்தை ஊக்குவிப்பது குறித்து இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது,

விதைப்பு மற்றும் அறுவடை முதல் பயிர்களைப் பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் வரை, வேளாண் நடவடிக்கைகளின் ஏறக்குறைய ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீன்வளம், தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் காடு சார்ந்த வாழ்வாதாரங்களிலும் பெண்கள் முக்கியப் பங்கு

வகிக்கின்றனர்.

வேளாண் துறையில் உள்ள பெண்களுக்குக் கொள்கை உருவாக்கம், முடிவெடுத்தல் மற்றும் தலைமைப் பொறுப்புகளில் அதிக பங்கு அளிக்கப்பட வேண்டும். இத்தகைய அதிகரித்த பங்கேற்பு பாலினச் சமத்துவத்தை உள்ளடக்கிய வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

வேளாண் கல்வியில் பெண்கள் அதிக அளவில் சேர தொடங்கியுள்ளனர். மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களே ஆவார். பல கல்வி நிறுவனங்களில் இந்த விகிதம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. மாணவிகள் கல்வியிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இளம் பெண்கள் வேளாண்மை மற்றும் வேளாண்-உணவு அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளை ஏற்பதற்கு ஏதுவாக, அரசுகள், சமூகம் மற்றும் வேளாண் துறையைச் சார்ந்த பங்குதாரர்கள் அனைவரும் ஆதரவையும் ஊக்கத்தையும் அளிக்க வேண்டும்

பெண்களின் பங்குகள் குறித்த பாரம்பரியமான கண்ணோட்டங்களுக்கு அப்பால் சமூகம் முன் நோக்கி நகர வேண்டும்.

தலைமைப் பண்பு என்பது தாய்மைக்கு இயல்பாகவே அமைந்த ஒன்றாகும். இருப்பினும், தாய்மை என்பது பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதாகவே கருதப்பட்டு வருகிறது. நாம் இந்த மனப்பான்மையை மாற்றிக்கொண்டு, பெண் விவசாயிகளுக்குத் தலைமை தாங்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

2026-ஆம் ஆண்டை 'பெண் விவசாயிகளுக்கான சர்வதேச ஆண்டாக' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. வேளாண்-உணவு மதிப்புச் சங்கிலிகள் முழுவதும் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துவதையும், பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா முன்னேறி வருகிறது. வேளாண் துறையில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

நில உரிமை, தொழில்நுட்ப அணுகல், நிதி ஆதாரங்கள் மற்றும் நிறுவன ரீதியான ஆதரவு ஆகியவை தொடர்பான சிக்கல்கள் உட்பட, பெண் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

சமீப ஆண்டுகளில், வேளாண் துறையில் பெண்களை வலுவூட்டுவதற்காகப் பல முன்னெடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகச் சுய உதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs) வாயிலாக இம்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த முயற்சிகள் விவசாயத்தில் பெண்களின் பங்கேற்பையும் அதிகாரமளிப்பையும் வலுப்படுத்துவதில் பயனுள்ளதாக உள்ளன.

கொள்கை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான உத்திகளை அடையாளம் காணவும், நிலையான மற்றும் உள்ளடக்கிய விவசாய உணவு முறைகளை உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் இந்த மாநாடு உதவும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b