திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தஞ்சாவூர் கோபுரம் போல பெரிய வரலாறு உண்டு அதனால் அது நிமிர்ந்து நிற்கிறது - நடிகர் வடிவேலு
சென்னை, 13 மார்ச் (ஹி.ச.) சென்னை,ஜி கே எம் காலனி,அரிச்சந்திரா மைதானத்தில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெஞ்சுரம் கொண்ட முதலமைச்சர் நிகரற்ற கொள்கை தலைவர் என்னும் தலைப்பில் வாழ்த்தரங்கம்
வடிவேலு


சென்னை, 13 மார்ச் (ஹி.ச.)

சென்னை,ஜி கே எம் காலனி,அரிச்சந்திரா மைதானத்தில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெஞ்சுரம் கொண்ட முதலமைச்சர் நிகரற்ற கொள்கை தலைவர் என்னும் தலைப்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் திலீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர்கள் வடிவேலு, நாசர், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, பகுதிச் செயலாளர் ஐ சி எப் முரளிதரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகர் நாசர் கூறியதாவது;

ஒரு கட்சிக்கு என்று ஒரு கொள்கை வேண்டும், ஆனால் இப்போது வெறும் பிரபலமாக இருப்பதால் மட்டுமே கட்சி ஆரம்பிக்கலாம் என ஒரு கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள்.

கொள்கையை அறிவிக்காமல் திட்டங்களை சிலர் அறிவித்து வருகின்றனர், திட்டங்கள் என்றுமே கொள்கை ஆகாது, எந்தக் கொள்கையில் நீங்கள் அரசை நடத்த போகிறீர்கள் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும், இப்போதுள்ள தமிழ்நாடு அரசு ஒரு கொள்கையோடு செயல்படுகிறது அதனால் பல சாதனைகளை படைத்து வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 75 ஆண்டு கால பாரம்பரியம் உள்ளது அதில் பல தியாகங்கள், பல வரலாறு என அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல பல உள்ளது.

நான் கட்சி சாராதவன், அனைவருக்கும் பொதுவானவன், நமக்கு தேவை - கல்வி, பொருளாதாரம், சுயமரியாதை, இவை அனைத்தும் ஒருங்கே இருக்கும் இடம் திராவிட முன்னேற்ற கழகம் தான்.

கடலில் பல அலைகள் வரும் போகும் ஆனால் பல அலைகளை தாங்கி நிற்கும் பாறை எப்போதும் நிலைத்து இருக்கும் அதுபோல நமது முதலமைச்சர் உள்ளார்.

தொடர்ந்து மேடையில் பேசிய பேராசிரியர் பர்வீன் சுல்தானா கூறியதாவது;

யார் வந்து நின்றாலும் என் தாய் தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் தலை குனிய விடமாட்டேன் என காவல் சாமியாக முதலமைச்சர் உள்ளார்.

2021 ஆம் ஆண்டு நமது தலைவர் முதலமைச்சராக பதவியேற்ற போது கொரோனாவால் தமிழ்நாடு சிதைந்திருந்தது அதனை சீர்படுத்தி இந்தியாவிலேயே தலைமை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திருக்கிறார் முதலமைச்சர்.

முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி பெண்களுக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்துள்ளது, உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர் நமது முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு பெண்களுக்கு சுயமரியாதை ஊட்டி வளர்க்கிறது.

இந்த ஆட்சியில் வீடுகளை வழங்கும்போது கூட பெண்கள் பெயரில் பதிவு செய்து வழங்குகிறார்கள் பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்ட பெண் இனத்திற்கு ஆறுதலாகவும் மருந்தாகவும் இந்த ஆட்சி உள்ளது.

நீங்கள் நடியுங்கள் நாங்கள் ரசிக்கிறோம் விசில் கூட அடிக்கிறோம் ஆனால் எங்களை ஆள வேண்டும் என நினைத்தால் எங்கள் குடும்பத் தலைவனாக இருக்க தகுதிப்பாடு என்ன இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள் அதனை சிலர் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தலைவன் என்பவன் சாமானிய மக்களோடு இருக்க வேண்டும் மேலும் பலருக்கு முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும், மூணு மணிக்கு வாங்க சினிமா பார்க்கலாம் என இளம் தலைமுறை நாசம் செய்கின்ற தலைவனுக்கு மத்தியில் பிள்ளைகளை, நீங்கள் படிங்கள் மத்ததெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் சொல்கிறார்.

இந்த தலைமுறைக்கான சரியான தலைவராக நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளார்.

திமுக சார்பில் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களைக் கூட்டி கூட்டங்களை நடத்துகிறோம் ஆனால் ஒருவருக்கும் ஒரு சிறு பிரச்சனை கூட இல்லை அதற்குக் காரணம் எங்கள் தலைவரும் எங்கள் கொள்கையும் தான்.

நடிகர் வைகைப்புயல் வடிவேலு பேசியதாவது;

முதலமைச்சரின் தொகுதியில் நின்று பேசுவதற்கு மிகுந்த பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

அவருக்கு 73 வது வயது போன்று தெரியவில்லை, 37 வயது இளைஞர்களைப் போல் செயல்படுகிறார்.

கடந்த இரு நாட்களாக பொதுமக்கள் அனைவரும் பெட்ரோல் பங்குகளில் பரபரப்பாக உள்ளனர் இந்த நிலைமையை புரிந்துகொண்ட முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

ஆனால் இந்த விவகாரத்தில் மக்களுக்காக பாஜகவில் இருந்து ஒருவர் கூட குரல் கொடுக்கவில்லை,

எதற்கெடுத்தாலும் திமுக அழிக்க வேண்டும் திமுகவை அழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் முதலில் இந்த பிரச்சனையால் மக்கள் அழியாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும், யார் யாரெல்லாம் திமுகவை அழிக்க வேண்டும் என்று சொன்னார்களோ அவர்கள் ஆள் தெரியாமல் சென்று விடுகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தஞ்சாவூர் கோபுரம் போல வரலாறு உண்டு அதனால் அது நிமிர்ந்து நிற்கிறது, இந்த கட்சியைப் போன்று வேறு எந்த கட்சிக்கும் வரலாறு என்பது கிடையாது.

சமீபத்தில் முதலமைச்சர் உரிமை தொகையில் ஐந்தாயிரம் கொடுத்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார், இந்த செய்தியை கேட்டு திமுக அழிய வேண்டும் என்று சொல்பவர் பலர் அழிந்து விட்டனர்.

இந்தக் கட்சியும் முதலமைச்சரும் இருப்பதால் மட்டுமே தமிழ் நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 200-தொகுதிகளில் வெற்றி பெற்று நமது தலைவர் மீண்டும் முதலமைச்சர் ஆவார்.

இந்த விழா என்பது முதலமைச்சர் பிறந்த நாள் விழாவாக மட்டுமில்லாமல் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி விழாவாகவும் உள்ளது.

அதனால் நான் இப்பொழுதே அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று பொதுமக்கள் மிகச் செழிப்போடு வாழ வேண்டும், பொதுமக்கள் ஏற்கனவே முடிவு எடுத்து விட்டார்கள் அவர்தான் முதலமைச்சராக மீண்டும் வரவேண்டும்.

இவ்வாறு அவர் மேடையில் பேசினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam