Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில், பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா சென்னையில் 20 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய எட்டு இடங்களில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது. இவ்வாண்டில் தமிழ்நாட்டின் முக்கிய 8 நகரங்களில் இவ்விழா நடத்தப்படும்.
இவ்விழாக்களில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை நிரப்பி தங்கள் பகுதிக்கான கலை பண்பாட்டுத்துறையின் மண்டல அலுவலகங்களுக்கு மார்ச் 31-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் கலைக்குழுக்களின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவதற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு 2027-ம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள் எனவும் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b