Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு (LPG) தட்டுப்பாட்டு இடர்பாடுகளை நீக்கி தொழில் துறை, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் தொழில் சீராக நடைபெற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமையில் சம்பந்தப்பட்ட அரசு துறையின் உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் எரிவாயுவிற்கு (LPG) பதிலாக மின்அடுப்புகளை பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும்.
ஒன்றிய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை இந்த மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு (LPG) பயன்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மின் அடுப்புகள் மின் சூடேற்றிகள் உள்ளிட்ட மின் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், 25 சதவிகிதம் / அதிகபட்சமாக 3.75 லட்சம் ரூபாய் மானியத்துடன் கடன் வழங்கவும், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 சதவிகிதம் / 2 லட்சம் ரூபாய் மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கவும் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவிகிதம் / அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரை மானியத்துடனும் கடன் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 60,698 தொழிற்சாலைகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணையினை பெற்று, எல்பிஜி.சிஎன்ஜி, டீசல், பர்னஸ் ஆயில், விறகு போன்றவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி இயங்கி வருகின்றது. இந்நிறுவனங்கள் எல்பிஜி., சிஎன்ஜி, போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக மண்ணென்ணை, ஆர்டிஎஃப், எச்எஸ்டி, பயோமாஸ் போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், இதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை (CTE/CTO) பெற தேவையில்லை, தகவல் தெரிவித்தால் மட்டும் போதுமானது எனவும், ஒன்றிய அரசு அறிவித்துள்ள எல்பிஜி., சிஎன்ஜி பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் கால அவகாசம் வரை இந்த விலக்கு அமலில் இருக்கும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 9,300 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு 55 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளும் திறன் உள்ளது.
இந்த இடர்பாட்டினால் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலினை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது. எரிவாயு (LPG) பற்றாக்குறையால் உணவகங்கள் மூடப்படும் வேளையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறி விற்பனை பாதிக்கப்படலாம்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு விவசாயிகளை தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை இடர்பாடின்றியும், 194 உழவர் சந்தைகளில் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்ய அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், மாநில அளவில் வணிக நிறுவனங்களுக்கு முறையாக எல்பிஜி சிலிண்டர் அளவீட்டினை ஒதுக்கீடு செய்து கண்காணிக்க தலைமைச் செயலாளர் அவர்கள் கண்காணிப்பில் அரசு உயர் அலுவலர்கள் கொண்ட குழு செயல்படவும், இதேபோன்று மாவட்ட அளவில் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு கண்காணிக்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இத்துடன், இந்த மாதம் பொது விநியோக திட்டத்திற்கு கூடுதலாக 3228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது
Hindusthan Samachar / vidya.b