போரின் தாக்கம் குறித்து காங்கிரஸ் மக்களிடையே பீதியை ஏற்படுத்துகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
கச்சார், 14 மார்ச் (ஹி.ச) இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். நேற்று குவாஹாட்டியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த நிலையில், இன்று சில்சாருக்கு வருகை தந்துள்ள அவர் பல
போரின் தாக்கம் குறித்து காங்கிரஸ் மக்களிடையே பீதியை ஏற்படுத்துகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு


கச்சார், 14 மார்ச் (ஹி.ச)

இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். நேற்று குவாஹாட்டியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில், இன்று சில்சாருக்கு வருகை தந்துள்ள அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரில் ரூ.23,550 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் ஏற்பாடு செய்யபப்ட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,

காங்கிரஸ் ஆட்சியின் போது அசாம் மாநில இளைஞர்களை வன்முறை, பயங்கரவாதத்தின் பாதைக்கு காங்கிரஸ் வழி நடத்தியது. காங்கிரஸ் வட மாநிலங்களை புறக்கணித்து விட்டது. போரின் தாக்கத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் ஒரு பொறுப்பான அரசியல் கட்சியின் பங்கை ஆற்றியிருக்க வேண்டும், ஆனால் அது அவ்வாறு செய்யத் தவறிவிட்டது. வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே பாஜவின் தாரக மந்திரமாகும். எல்லைப் பகுதிகளை நாட்டின் கடைசி கிராமங்களாக காங்கிரஸ் கருதியது. ஆனால் நாங்கள் நாட்டின் முதல் கிராமங்களாக கருதினோம். ஒரு காலத்தில் வர்த்தகத்தின் மையமாகத் திகழ்ந்த பராக் பள்ளத்தாக்கின் வலிமை பறிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையை மாற்றியமைக்கவே பாஜவின் இரட்டை இன்ஜின் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதில் கவனம் செலுத்துகிறது. காங்கிரஸ் கட்சி எங்குச் சிந்திப்பதை நிறுத்துகிறதோ, அங்கிருந்து நாங்கள் எங்கள் பணியைத் தொடங்குகிறோம்.

காங்கிரசுக்கு அசாம் அல்லது நாடு குறித்த எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை. ஆனால் என்னை அவதூறு செய்வது, வதந்திகளைப் பரப்புவது மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் பொய்களை மட்டுமே அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Hindusthan Samachar / vidya.b