20 லிட்டர் கேனில் பெட்ரோல் விற்பனை- உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி..!
புதுடெல்லி, 14 மார்ச் (ஹி.ச.) சமீபத்தில் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு குறைந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில் மக்கள் அவர்களது வாகனங்களில் போதிய அளவு பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்பிக் கொண்டதோடு வாட்டர் கேன்களில் பெட்ரோலை சேமிக்க
மத்திய அரசு


புதுடெல்லி, 14 மார்ச் (ஹி.ச.)

சமீபத்தில் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு குறைந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில் மக்கள் அவர்களது வாகனங்களில் போதிய அளவு பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்பிக் கொண்டதோடு வாட்டர் கேன்களில் பெட்ரோலை சேமிக்க தொடங்கினர்.

சில தினங்களுக்கு முன்பு வெளியான வீடியோ ஒன்றில், நபர் ஒருவர் அவரது பைக்கின் முன்புற பகுதியில் 20 லிட்டர் வாட்டர் கேனில் பெட்ரோல் நிரப்பி செல்வது போன்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வதந்தி காரணமாக பெட்ரோலை மக்கள் சேமிக்கிறார்கள் என்றாலும் இது மனித உயிர்களுக்கான பெரும் ஆபத்து என பலரால் எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் போதிய அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையில் பெட்ரோல் விநியோகம் செய்யும் ஒரு பங்கில் ஆபத்தான முறையில் கேனில் பெட்ரோல் நிரப்பி செல்வது மத்திய அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்ததாகவும், உடனடியாக மத்திய அமைச்சகம் தலையிட்டு குறிப்பிட்ட பெட்ரோல் நிலையத்தின் உரிமை நிறுத்தி வைக்க பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை வாட்டர்கேன் உள்ளிட்டவற்றில் கொண்டு செல்லவோ அல்லது சேமிக்கவோ கூடாது என்றும், இது கடுமையான ஆபத்துகளை உண்டாக்க நேரிடும் என மத்திய அமைச்சகம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தில் சில்லறை விற்பனையில் வினியோகம் செய்யும் பெட்ரோல் பம்புகள் உரிய விதிமுறைகளை பின்பற்றி பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விற்பனை செய்ய வேண்டும் எனவும் விதிமுறைகள் மீறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் மத்திய அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam