Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 14 மார்ச் (ஹி.ச.)
கேரளாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் இக்கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் 5 நாட்கள் வழிபாடு நடைபெறும்.
அந்த வகையில், தமிழ் மாதத்தின் 'பங்குனி' மற்றும் மலையாள மாதத்தின் 'மீனம்' மாதங்களின் மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (மார்ச் 14) திறக்கப்படுகிறது.
அதற்காக, இன்று மாலை 5 மணியளவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மாதாந்திர பூஜைகள் நிறைவடைந்து மார்ச் 19 ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும். அதைத் தொடர்ந்து, ‘பங்குனி உத்திர திருவிழா’வுக்காக மார்ச் 22 ஆம் தேதி மாலை சபரிமலை நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
மறுநாள் 23 ஆம் தேதி, பங்குனி உத்திர திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 10 நாட்கள் தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரத்தோடு பக்தர்கள் தரிசனம் நடைபெறும்.
திருவிழாவின் பத்தாம் நாளான ஏப்ரல் 1 ஆம் தேதி பம்பையில் அய்யப்பனுக்கு 'ஆராட்டு விழா' வெகு விமரிசையாக நடக்கும். பின்னர் அன்று மாலையே கொடி இறக்கப்பட்டு, இரவு 'ஹரிவராசனம்' பாடி நடை அடைக்கப்படும். இந்நிலையில், மாதாந்திர பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழாவிற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.
மேலும், பக்தர்தர்கள் தரிசனத்துக்காக sabarimala.org.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
சபரிமலை சன்னிதானத்தில் உள்ள தங்கும் அறைகளை www.onlinetdb.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.
Hindusthan Samachar / vidya.b