துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்பத்தூர் வருகை
திருப்பத்தூர், 14 மார்ச் (ஹி.ச.) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பத்தூர் மாவட்டத்துக்கு இன்று வருகை தருகிறார். அவர் திருப்பத்தூர் அருகே பாச்சல் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில
Udhayanidhi Stalin visits Tirupattur today.


திருப்பத்தூர், 14 மார்ச் (ஹி.ச.)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பத்தூர் மாவட்டத்துக்கு இன்று வருகை தருகிறார்.

அவர் திருப்பத்தூர் அருகே பாச்சல் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முடிவுற்ற பல்வேறு பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

மேலும், பல்வேறு துறைகளின் சார்பில், 4,949 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியே 22 லட்சத்து 382 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தொடர்ந்து திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் ஜோலார் பேட்டையில் கலைஞர் நூலகத்தையும், வாணியம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

துணை முதல்வா் வருகையையொட்டி, எஸ்.பி. வி.சியாமளாதேவி தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ஒரு நாள் முழுவதும் திருப்பத்தூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b